Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்புள்ளவனைத் தெய்வமாக உயர்த்தும் ... தியாகராஜர் கீர்த்தனை கேட்டால் ஆடாத மனமும் ஆடுமே! ஆனந்த கீதம் பாடுமே! தியாகராஜர் கீர்த்தனை கேட்டால் ஆடாத ...
முதல் பக்கம் » துளிகள்
பொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2011
12:01

பொங்கல் வைக்க நல்ல நேரம்:  காலை- 7.30 மணி முதல் 8.30 மணி

சூரிய வழிபாட்டிற்குரிய பொங்கல்

பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. தீயினால் புதுப்பானையில் (நிலம்) உள்ள அரிசி (நிலத்தின் பயன்) நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின்றவர்கள், ஐம்பெரும் பூதங்களையே வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள் !இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை கிமு 2000 - க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள். சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி 1238--64) இதைக் கட்டினான்.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது. சூரியனைப் பரம்பொருளாக ஆதித்திய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி சூரியனுக்கு உகந்த மந்திரம். சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது. சூரிய வழிபாடு சௌரமதம் என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌரமதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது.  தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான் என்று கூறி ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை ஜீவத்திறல் என்றும் ஆயுளை வளர்க்கும் அன்னம் என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

*பொங்கல் தத்துவம்

பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கம் போகின்றன.பொங்கல்  பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று குறிப்பிடுகிறது.

அழகெல்லாம் முருகனே!

தமிழ்க்கடவுள் என்று முருகப்பெருமானைப் போற்றுகிறோம். முருகன் என்ற சொல்லுக்கு நேரான பொருள்அழகு என்பதாகும். நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை வழிபட்டு பரவசம் கண்டவர்கள் நம் முன்னோர். இளஞ்சூரியனைப் பார்க்க செக்கச்செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலவண்ணம் கொண்டிருக்கும். இந்த அழகுக்காட்சியைக் கண்டமக்கள், முருகு என்று சொல்லி மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் வாகனம் மயில். மயில் நீலநிறத்துடன் இருக்கும். முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர். காலப்போக்கில் சூரியன் மட்டுமில்லாமல் மலை, காடு, அருவி என்று இயற்கை அழகுக் காட்சிகளையெல்லாம் முருகனாகவே போற்றி வழிபட்டனர். அதைத்தான் அழகெல்லாம் முருகனே என்று குறிப்பிடுகிறோம்.

கண்கண்ட தெய்வம்

விநாயகரை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் மதம் காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். சக்திவழிபாட்டினை சாக்தம் என்பர். சைவசமயத்தில் சிவபெருமானே முதற்பொருள். திருமாலை வழிபடுவதற்கு வைணவம் என்று பெயர்.சூரியனையே பரம்பொருளாக வழிபடும் முறை சவுரம் ஆகும். இந்த ஆறுவித வழிபாடுகளில் சூரியனைத் தவிர, மற்ற தெய்வத்தை கண்களால் காணும் வாய்ப்பு கிடையாது. கண்கண்ட தெய்வமான சூரியன் கிழக்கில் உதயமாகி அருள்புரிகிறார். இவருடைய வழிபாடு பழங்காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போது கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

உலகின் முதல் வழிபாடு

காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாக குறிப்பிடுவர். இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.

முதல்நாள் ஞாயிறு ஆனது ஏன்?

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும். மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய் வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

சூரியனின் வடதிசைப்பயணம்

12 மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார். இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர். பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயணகாலம் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவாகவும் இருக்கும். ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர்.

சூரியவம்சத்து சுடர்மணிகள்

அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம். நீதி நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லமன்னர்கள் பிறந்த குலம் இது. எவ்வளவு துன்பம் நேர்ந்தபோதும், உண்மையிலிருந்து விலகாமல் சத்தியம் பேசிய அரிச்சந்திரன், சனிதோஷம் போக்கும் நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீபச்சக்கரவர்த்தி, தசாவதாரங்களில் ஒருவராக வணங்கப்படும் ராமபிரான் ஆகியோர் சூரியகுலத்தில் தோன்றியவர்கள். கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே. சூரியனை வழிபட்டவர்கள் சூரியகுலத் தோன்றல் களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.

அனுமனுக்கு உபதேசித்த மந்திரம்

சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு சிறப்பு பெயர் உண்டு. ஆனால், அந்த அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். ஒருமுறை அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது. விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயுவின் மகனே அனுமன்). கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன்அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார். அன்று முதல் அனுமன் சர்வவியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்

சிறப்பான தை முகூர்த்தம் சுபநிகழ்ச்சி நடத்துவதற்குரிய மாதங்களில் முகூர்த்தங்கள் அதிகமுள்ள மாதமாக தை அமைந்துள்ளது. பெண்ணுக்கு திருமணம் பேசும் பெற்றோர், வரும் தையில் கல்யாணத்தை வைச்சுக்கலாம் என்று சொல்வது வழக்கம். அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும். அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது. இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு. வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும். அதனையும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்பர்.

மகரசங்கராந்தி

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் மூன்று ராசிகள் குறிப்பிடத்தக்கவை. சித்திரை மாதத்தில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசி மாதத்தில் சூரியன் பலவீனத்தையும்(நீச்சத்தன்மை)பெறுகிறார். மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர். இம்மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் (பசுக்களால் யோகம்) உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.

விழா நிறைந்த தைமாதம்

தைமாதம் முதல் நாளிலிருந்து முப்பது நாளுமே பக்திமயமாகவும், விழாமயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர். மகரஜோதியாக சபரிமலை ஐயப்பன் தைமாதத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தையில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் தைவெள்ளி என்று சிறப்பாக குறிப்பிடுவர். இந்நாளில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வர். தை அமாவாசை நாளில் தீர்த்தக்கரைகளில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. தை பவுர்ணமிநாளில் பூசநட்சத்திரமும் சேரும் வேளையில் தைப்பூசவிழா நடைபெறும். இவ்விழா முருகன் கோயில்களில் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக பழநிக்கோயில் தேர்பவனியில் முருகப்பெருமான் வீதியுலா வருவார். முருகபக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துவருவர். மதுரையில் ராஜாங்க விழாவாக, மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரோடு தெப்பம் சுற்றிவருவாள்.

நன்றி காட்டும் நல்லநாள்

உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப் பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன.

வெற்றி நாயகனுக்கு நமஸ்காரம்

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள், தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.
* தங்க நிறமானவனே நீ! அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.
* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே! சப்த என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய். அழித்த பிறகு மீண்டும் அவற்றை படைப்பதற்காக பிரகாசம் மாறாமல் அப்படியே இருக்கிறாய்.
* கதிரவனே! நீ எல்லோராலும் கொண்டாடப்படுகிறாய். அக்னியை உனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறாய். மாலை வேளையில் மறைந்து போகிறாய். பனியை அழிக்கிறாய். ஆகாயத்திற்கு நீயே நாதன், ராகு என்னும் இருளைப்பிளந்து கொண்டு வெளியில் வரும் படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய்.
* ரிக், யஜூர், ஸாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன், தட்சிணாயன காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
* வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயகாலத்தில் மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லா பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிக்கவும் செய்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிலைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதைகளைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா, அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற மூர்த்திகளை உள்ளடக் கியவனே! உனக்கு நமஸ்காரம்.
* கண் கண்ட தெய் வமே! உத்ய பர்வதமலையில் உதிக்கும் உனக்கு நமஸ்காரம். மேற்கு மலையில் அஸ்தமிக்கும் உனக்கு நமஸ்காரம். நட்சத்திர மண்டலங்களுக்கும், கிழமைகளுக்கும் அதிபதியாய் இருக்கும் உனக்கு நமஸ்காரம்.
* வணங்குவோருக்கு வெற்றியையும், ÷க்ஷமத்தையும் கொடுப்பவனே! குதிரைகளால் இழுக்கப்படும் தேரை உடையவனே! இருட்டை நாசம் செய்பவனே! வணங்குவோரின் எதிரிகளை அழிப்பவனே! பரந்த உலகத்தின் நாயகனே! நன்றியற்றவர்களை கொல்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* உருகியோடும் தங்க ஆறு போன்ற ஒளியைக் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குகிறவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கு சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar