சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2022 10:12
சபரிமலை: சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி துவங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிகிச்சை குறிப்புகளின் நகல்களை கையில் வைத்திருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் மலைப்பாதைகளில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் வகையில் அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுகலான பாதைகளில் செல்லும், பைக் பீடர் ஆம்புலன்ஸ், கரடு முரடான பாதைகளிலும் பயணம் செய்ய முடிகிற 4:4 ரெஸ்க்யூ வேன் மற்றும் ஐ.சி.யு., ஆம்புலன்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று வாகனங்களிலும் ஆக்சிஜன், மருந்து உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இவற்றை, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன், சுகாதாரத்துறை செயலர் டிங்கு பிஸ்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஊரில் ஏதாவதுசிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், அதற்கான குறிப்பு மற்றும் மருந்து குறிப்பு நகல்களை கொண்டு வரும்படியும், இதன் வாயிலாக விரைவாக சிகிச்சை அளிக்க முடியும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.