பதிவு செய்த நாள்
03
டிச
2022
12:12
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் நவம்பர் மாதத்தில் எட்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நவ., 28ல் அதிகபட்சமாக 84 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலின் நடை திறந்த நவ., 17 தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
பெண் குழந்தைகள்: நவ., 17 முதல் 30 வரை எட்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். நவம்பர் 28ல் அதிகபட்சமாக 84 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளால் சிறு வயது பக்தர்கள் சபரிமலைக்கு வரவில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சபரிமலைக்கு வரும் சிறுவயதினர் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது. 10 வயதுக்குஉட்பட்ட பெண் குழந்தைகள் அதிகம் வருகின்றனர். பம்பையில் சிறு வயது பக்தர்கள் கையில் பெற்றோர் பெயர், மொபைல் போன் எண் அடங்கிய பேண்ட் அணிவிக்கப்படுகிறது.
நீண்ட நேரம் கியூ: ஆன்லைன் முன்பதிவு வாயிலாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் நீண்ட நேரம் கியூவில் நிற்கும் நிலை மாறியுள்ளது. என்றாலும் கூட்டம் 75 ஆயிரத்தை தாண்டும்போது சில மணி நேரம் கியூவில் நிற்க வேண்டியுள்ளது. இனி வரும் நாட்களில் தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் முன்பதிவுக்கான சிலாட்டுகள் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
தங்குவதற்கு 650 அறைகள் தயார்: சபரிமலையில் உள்ள சபரி விருந்தினர் மாளிகை தேவசம் போர்டுக்கு சொந்தமானது. மீதியுள்ள தங்குமிடங்களை நன்கொடையாளர்கள் கட்டியுள்ளனர். இவர்களுக்கு, மகரஜோதி நாள் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் அறைகள் இலவசமாக வழங்கப்படும். மீதி நாட்களில் இவற்றை வாடகைக்கு விட்டு வருமானத்தை தேவசம் போர்டு எடுத்துக்கொள்ளும்.இந்த தங்குமிடங்களில் பக்தர்கள் அறை எடுத்து தங்க, 12 மணி நேரத்துக்கு 250 ரூபாயும், 16 மணி நேரத்துக்கு 350 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் அதிகரிக்கும். வி.ஐ.பி., பக்தர்களுக்கு, சபரி விருந்தினர் மாளிகையில் அறைகள் வழங்கப்படுகின்றன. இங்கு இரண்டு படுக்கை அறைகளுக்கு 12 மணி நேரத்துக்கு, 1,000 ரூபாயும், 16 மணி நேரத்துக்கு 1,400 ரூபாயும், 24 மணி நேரத்துக்கு 2,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இவற்றில் வி.ஐ.பி., புக்கிங் போக மீதம் இருந்தால், மற்ற பக்தர்களுக்கு வழங்கப்படும்.சபரிமலையில், மொத்தம் உள்ள 650 அறைகளில், 104ல் மட்டுமே ஆன்லைன் முன்பதிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறைகளை, www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.