பதிவு செய்த நாள்
12
டிச
2022
08:12
சபரிமலை: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களை மழையும் சோதிப்பதால் சிரமப்பட்டனர். இன்று ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் அனைவரும், ஆன்லைன் முன்பதிவு வாயிலாக அனுமதிக்கப்பட்டாலும், கடந்த மூன்று நாட்களில் அதை முறையாக கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. காலையில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் அன்று இரவிலும், முதல் நாள் இரவு முன்பதிவு செய்தவர்கள் அடுத்த நாள் காலையிலும் தரிசனம் செய்கின்றனர். நீண்ட நேரம் கியூ என்பது பக்தர்களை மிகவும் சிரமப்படுத்துகிறது.
உத்தரவு: கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதாக கூறி சரங்குத்தி பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் மலை ஏறி களைப்படைந்தவர்கள் மீண்டும் ஒரு ஏற்றம் ஏறி, பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நெரிசலில் சிக்கி திணறிய குழந்தைகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். இதனுடன் நேற்று அதிகாலையிலும், பகலிலும் பெய்த மழையும் பக்தர்களை மிகவும் சிரமப்படுத்தியது. சன்னிதானம் சகதி காடானது. சபரிமலையின் தற்போதைய நிலையை தானாக ஆராய்ந்த கேரள உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பம்பை - நிலக்கல் தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். தினசரி முன்பதிவு 75 ஆயிரத்தை தாண்டினால், நெய்யபிஷேக நேரத்தில் நடக்கும் அஷ்டாபிஷேகத்தின் எண்ணிக்கையை தந்திரியுடன் ஆலோசித்து குறைக்க வேண்டும். பக்தர்கள் வரும் பாதைகளில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்துவதை ஊடகங்கள் வழியாக அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் அன்னதானம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதை தேவசம்போர்டு, பத்தணந்திட்டை கலெக்டர், எஸ்.பி., சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை: இதற்கிடையில் இன்று ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். கூட்டத்தை ஒழுங்கு படுத்தி விரைவாக தரிசனம் கிடைக்க செய்வது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். கூட்டம் மிக அதிகமாகும் போது நிலக்கல்லுக்கு முன், இலவுங்கல் முதல் பக்தர்கள் வாகனங்களை தடுத்து படிப்படியாக அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
10 பேர் காயம்: நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நீலிமலை பாதையும், டிராக்டர் ரோடும் இணையும் இடமான மரக்கூட்டத்தில் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்தது. இந்த நேரத்தில் சன்னிதானத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவருடன் பம்பைக்கு வந்து கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்த போலீஸ் முயற்சித்த போது நெரிசல் ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதை தொடர்ந்து மத்திய அதிவிரைவுப்படையினர் மரக்கூட்டம் சென்று நிலைமையை சரி செய்தனர்.
இரவு தரிசன நேரம் நீட்டிப்பு: சபரிமலை மரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பக்தர்களும், போலீசாரும் காயமடைந்த பிரச்னையால் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலும் கேரள உயர் நீதிமன்ற சபரிமலை டிவிஷன் பெஞ்ச் சிறப்பு விசாரணை நடத்தியது. அப்போது ஆஜரான தேவசம்போர்டு வழக்கறிஞரிடம், கூட்டம் அதிகமாக இருப்பதால் தரிசன நேரத்தை அதிகரிக்க முடியாதா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தந்திரியிடம் ஆலோசித்து முடிவு சொல்வதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.கூட்டத்தை ஒழுங்குபடுத்த தினசரி முன்பதிவை 85 ஆயிரமாக குறைக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவு நடை அடைக்கும் நேரத்தை 11:00ல் இருந்து 11:30க்கு மாற்ற, தந்திரி கண்டரருராஜீவரரு அனுமதி வழங்கியுள்ளார். அதன்படிநேற்றும், நேற்று முன்தினமும் இரவு 11:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.