பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் நேற்று மண்டல பூஜை விழா, கோலாகலமாக நடந்தது. பரமக்குடி தரைப்பாலம் அருகில் அருள் பாலிக்கும் தர்மா சாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில், காலை 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஐயனுக்கு 108 சங்காபிஷேகம், கருப்பண சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு மேல் ஐயன் சர்வ அலங்காரத்துடன் திருவீதி வலம் வந்தார். *பரமக்குடி 5 முனை பகுதியில் அருள்பாலிக்கும் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவையொட்டி, ஐயப்ப பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் மற்றும் பால் குடங்களை எடுத்து சென்றனர். பெருமாள் கோயில் வைகை ஆறு படித்துறையில் தொடங்கி, பெரிய கடை பஜார் வழியாக கோயிலை அடைந்தது. அங்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை ஐயப்பன் நகர் வலம் வந்தார்.
*எமனேஸ்வரம் சவேராஷ்டிர சபைக்கு பாத்தியமான வண்டியூர் திடலில் அருள் பாலிக்கும் ஐயப்பன் கோயிலில் 108 கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை ஐயப்பன் வீதி வலம் வந்தார்.