பதிவு செய்த நாள்
29
ஜன
2023
08:01
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா, தைப்பூச திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில், இந்தாண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவையொட்டி, நேற்று இரவு, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு புண்யாக வாசனம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், யாக வேள்வி, இறை அனுமதி பெறுதல் உள்ளிட்டவைகள் நடந்தது. அதன்பின், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர். அதனைத்தொடர்ந்து, காலை, 7:23 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சேவல் உருவம் பொறிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட, 25 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்டிருந்த கொடி, கோவில் கொடிமரத்தில், கொடி மங்கள நாண்களால் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின்போது, பக்தர்கள், அரோகரா அரோகரா என, பக்தி பரவசத்தில் கோஷம் எழுப்பினர். மாலை, அனந்தாசனத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுப்பிரமணிய சுவாமி, பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் நேற்று காட்சியளித்தார். சுற்றுவட்டார பகுதி பக்தர், ஏராளமானோர், பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனர். நேற்று, தைப்பூச திருவிழா துவக்கத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.