பதிவு செய்த நாள்
03
மே
2023
09:05
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த நெருப்பெரிச்சல் ஜீ.என் கார்டனில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் திருக்கோயில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 25 ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணி முதல், நெருப்பெரிச்சல் அங்காளம்மன் கோவிலில் இருந்து, நூற்றுகணக்கான பக்தர்கள் தீர்த்தம், பால்குடம் மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைப்பெற்றது. மாலை 4:00 மணிக்கு அலங்கார பூஜை, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு பட்டு படைக்கலம் அழைத்தல், 8:00 மணிக்கு கம்பம் சுற்றி ஆடுதல், 10:00 மணிக்கு அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று 3 ந் தேதி காலை 6:00 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, மாவிளக்கு மற்றும் அம்மனுக்கு சீழ்வரிசை எடுத்து ஊர்வலமாக செல்லுதல், 8:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 10:00 மணிக்கு அம்மனுக்கு பொது பொங்கல் வைத்தல், 10:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை மற்றும் கிடா வெட்டுதல், மாலை 4:00 மணிக்கு சக்தி விநாயகர் கோவில் இருந்து பூவோடு ஊர்வலம், 6:00 மணிக்கு வீர மக்களின் காப்பு கழட்டுதல் தொடர்ந்து கம்பம் கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4 ந் தேதி காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 4:00 மணிக்கு அம்மன் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா வருதல். ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.