தூத்துக்குடி: நாகலாந்து மட்டுமே என் கண்களில் தெரிகிறது. அரசியல் பேச்சு வேண்டாம் என நாகலாந்து கவர்னர் இல கணேசன் தெரிவித்தார்.
நாகலாந்து மாநில கவர்னர் இல கணேசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர். தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் ஏற்பாடு நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த, கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச அளவில் இந்தியாவின் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் பேசினார் முன்னதாக அவர் காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
திருச்செந்தூரில் இல கணேசன் கூறுகையில், திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற எனது நீண்ட நாள் பிரார்த்தனை தற்போது நிறைவேறுகிறது. நாகலாந்தில் மக்கள் அமைதி நோக்கி திரும்பி வருகிறார்கள். தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் தொகுதிகளில் கூட 60 சதவீதம் தான் வாக்குப்பதிவு நடக்கிறது. ஆனால் நாகலாந்தில் ஒட்டுமொத்தமாக 84 சதவீதம் வாக்களித்துள்ளார்கள். சில தலைமறைவு இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாகலாந்தை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் முன்னேற்றம் குறைவு தான். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன் என்றார். தமிழகத்தில் இரண்டு ஆண்டு தி.மு.க.,ஆட்சி செயல்பாடுகள் குறித்தும், மரக்காணம் கள்ளச்சாராய இறப்புகள் குறித்தும் கேட்டபோது எனக்கு நாகலாந்து மாநிலம் மட்டுமே கண்ணில் தெரிகிறது என சிரித்தபடியே கூறி விட்டுக் கிளம்பினார்.