பதிவு செய்த நாள்
19
மே
2023
12:05
கோயில்களுக்கு செல்ல முடியாத பக்தர்கள் தங்களின் பிறந்தநாள், திருமண நாளில் கோயில் பிரசாதத்தை அஞ்சல் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். பிரசாதங்களை அர்ச்சனை செய்து, வீட்டிற்கே அனுப்பி வைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக 48 முதல் நிலை கோவில்களில் பிரசாதங்கள் தபால் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கத்தில் தொடக்கி வைத்தார். கோயில் தகவல்களை பக்தர்கள் அறிய திருக்கோயில் செயலி தொடங்கப்பட்டது.
இந்தச் செயலிகளை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு.. கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் "திருக்கோயில்" என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயில்கள் குறித்த தலவரலாறு, நடை திறக்கும் நேரம். பூஜைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், கோயில் காணொலி, விழாக்களின் நேரலை, கூகுள் வழிகாட்டி, வழித்தடம், பக்தர்களுக்கான தங்கும் வசதி, பொருட்கள் வைப்பறை போன்ற வசதிகள். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு செல்லுகையில் மின் ஊர்தி, சாய் தளத்தில் நாற்காலி வைத்து அழைத்து செல்வதற்கு தரப்பட்டுள்ள தொலைபேசி எண் போன்ற கட்டணமற்ற சேவைகளையும் இந்த செயலின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எந்த கோவிலில் எந்த உணவு சிறப்போ அதுவே பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். கூடுதலாக பிரசாத கட்டணம் கிடையாது. உலகில் எந்த நாட்டில் இருந்தும் கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.