சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி பூக்குழி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2023 10:06
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான பூக்குழி விழா நடந்தது. இவ்விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு அம்மனுக்கு வைகையாற்றில் பூப்பல்லக்கு புறப்பாடு நடந்தது. இதையடுத்து நேற்று மாலை சங்கங்கோட்டை மந்தைகளத்தில் பம்பையுடன் அம்மனின் கரகம் எடுத்து பூசாரி சண்முகவேல் பூக்குழி இறங்கினர். இதனைத் தொடர்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, பால்குடம், காவடி சுமந்து பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இந்நிகழ்வில் பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க., வினர் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர். இந்நிகழ்வில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர்கள் பசும்பொன், கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், சுகாதார அலுவலர் பிரபாகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு அம்மன் மின்னொளி அலங்காரத்துடன் கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடந்தது.