காளஹஸ்தி சிவன் கோயில் மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2023 03:10
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மாஸ்டர் பிளான் குறித்தான ஆய்வு கூட்டத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் மாஸ்டர் பிளான் வடிவமைப்பு நிறுவனத்தின் பிரதிநிதி (துரோணா கன்சல்டன்சி) சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். மாஸ்டர் பிளான் வடிவமைப்பு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று சர்மா விளக்கினார். முதற்கட்டமாக கோயில் ராஜகோபுரம் முதல் ஜல விநாயகர் கோயில் வரை நிலத்தடி வாகன நிறுத்துமிடம் மற்றும் க்யூ காம்ப்ளக்ஸ் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும், ஜல விநாயகர் கோயிலில் இருந்து கோயிலின் நான்காவது வாயில் வரை மண்டபம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அதில் (கலாச்சார) கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்றதாக அமைக்க உள்ளதாகவும், மேலும் மண்டபத்தின் மேல் (மாடியில்) பகுதியில் ₹500, 750, 1500/ ராகு கேது பூஜைகள் நடக்கும் வகையில் (மேல் தளம்) அமைக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தலைமையில் வருவாய்த் துறை முதன்மைச் செயலாளருடன் இணைந்து கட்டுமானப் பணிகளுக்கு வருவாய்த் துறையிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுப்பதாக தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்தார் முதற்கட்ட பணிக்கான வடிவமைப்பு முடிவடைந்துள்ள நிலையில் அதனை அமல்படுத்த எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தலைமையில் மாநில அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து இதற்கான இறுதி ஒப்புதலைப் பெற உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு முடிவு செய்துள்ளார். இக்கூட்டத்தில் கோயில் செயல் பொறியாளர் நூகரத்தினம், துணை பொறியாளர் ஜெ.வெங்கடசுப்பையா, மற்றும் அதிகாரிகள் சீனிவாசலு தனபால் கிஷோர் குமார், ஷோபா ராணி மற்றும் தேவஸ்தான பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.