பதிவு செய்த நாள்
16
அக்
2012
05:10
பாண்டவர்களின் முன்னோர்களுள் ஒருவர் யயாதி. ராஜாதி ராஜன்! சக்கரவர்த்தி! தோல்வி என்பதையே காணாத பராக்கிரமசாலி நீதிநெறி தவறாத பக்திமான். இவர் தன் மனைவி தேவயானிக்குச் செய்த தவறின் காரணமாக மாமனார் சுக்ராசாரியார் இட்ட சாபத்தினால், திடீர் என்று மூப்பை அடைந்தார். கிழப்பருவம் அடைந்த அனைவரும் அதிலுள்ள கஷ்டத்தை அறிவார்கள். அதிலும் நடுத்தர வயதிலிருக்கும் ஒருவர் திடீர் என்று மூப்பை அடைந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா! இயற்கைக்கு மாறாக திடீரென கிழத்தனத்தை அடைந்த யயாதிக்கு ஐந்து அழகிய புதல்வர்கள் இ ருந்தார்கள். சத்திரியக் கலைகளில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களை அழைத்து யயாதி, உங்கள் பாட்டனார் சுக்ராசாரியாருடைய சாபத்தினால் இந்த மூப்பை நான் எதிர்பாராமல் அடைந்துவிட்டேன்.
நான் வாழ்வின் சுகபோகங்களைத் திருப்திப்பட அனுபவிக்கவில்லை. உங்களில் ஒருவன் என் மூப்பைப் பெற்றுக் கொண்டு, தன் இளமைப்பருவத்தை எனக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு எவன் என் கிழப்பருவ உடலை எனக்காக ஏற்றுக் கொள்கிறானோ, அவனுக்கு என் ராஜ்ஜியத்தை ஆளும் உரிமையைக் கொடுப்பேன்! அவனுடைய இளமை உடலைக் கொண்டு இன்ப சுகங்களை அனுபவிப்பேன் என்றார். முதலில் மூத்த குமாரனைக் கேட்டார் உம்முடைய கிழப் பருவத்தை நான் ஏற்றுக் கொண்டால், எனக்கு ராஜ்ஜிய உரிமை கிடைக்கலாம் அதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது? என்னைக் காட்டிலும் உமக்குப் பிரியமான என் தம்பிகளைக் கேளும்! என்று உபாயம் சொல்லி விட்டு அபாயத்திலிருந்து தப்பித்துக் கொண்டான் மூத்த மகன். இரண்டாம் மகனைக் கேட்டதற்கு, தந்தையே! வலிமையையும் வடிவத்தையும் மட்டுமல்லாமல் அறிவையும் அழித்துவிடும் மூப்பு! கூப்பிட்ட குரலுக்கு யாரும் வரமாட்டார்கள்.
அவர்களைச் சொல்லி தப்பில்லை. ஈன ஸ்வரத்தில் நாம் கூப்பிடுவது யார் காதிலும் விழாதே! சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் பிடிக்க வேண்டிய பருவத்தில், நான் தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடக்க, எனக்குத் தலை எழுத்தா, என்ன! என்று வெட்டு ஒன்னு; துண்டு ஏகப்பட்டது என்கிற ரீதியில் பேசிவிட்டுப் போய்விட்டான். யயாதி மனம் குமுறிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பக்கமாக மூன்றாம் மகன் வந்தான். அவனும் ஊஹூம்; மாட்டேன் என்று கூறிவிட்டு முன்னால் போன சேடிப் பெண்ணைப் பின்தொடர்ந்து நடந்தான். நான்காவது மகனிடம் சில காலத்துக்கு உன் இளமையை எனக்கு தந்தாயானால், பிறகு அதை உனக்கே திருப்பிக் கொடுத்துவிட்டு, சாபத்தினால் எனக்கு வந்த மூப்பை நானே பெற்றுக் கொண்டு விடுவேன் என்றார். கிழப்பருவமா? ஐயோ! உடல் அசுத்தத்தை நீக்கிக் கொள்வதற்குக் கூட பிறர் உதவியை நாட வேண்டியிருக்கும்! எனக்கு வேண்டாம். அந்த வாழ்வு! என்று கூறி, நடையைக் கட்டினான் நான்காம் மகன்.
தன் சொல்லை எப்போதும் தட்டாத கடைசி மகனை அழைத்தார் விஷயத்தைச் சொல்லி நான் சில காலம் சுகபோகங்களை அந்தப்புர இன்பங்களை அனுபவித்துவிட்டு பிறகு உன் இளமையை உனக்கே திருப்பிக் கொடுத்துவிட்டு மூப்பையும் துக்கத்தையும் வாங்கிக் கொள்வேன், நீயும் மறுத்துவிடாதே! என்று கெஞ்சினார். கடைசி மகன் பெயர் புரு. சந்தோஷமாகச் செய்கிறேன் அப்பா! மூப்பையும் ராஜ்ய பாரத்தையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றான் அவன். யயாதி அவனை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார். தீண்டின மாத்திரத்தில் மகனின் இளமையை யயாதி அடைந்தார் மூப்பை ஏற்ற புரு. அரசு பரிபாலனம் செய்யலானான். யயாதி தனது மனைவியாருடன் மகிழ்ந்திருந்து நாட்களைக் கழித்தார். அதன் பின் குபேரனுடைய உத்யான வனத்தில் ஒரு அப்ஸரஸுடன் அநேக ஆண்டுகள் ஆட்டம் போட்டார்.
ஆட்டமெல்லாம் ஆடி முடிந்து நாடி தளர்ந்தும்கூட யயாதிக்கு திருப்தி உண்டாகவில்லை. மகனிடம் திரும்பி வந்தார். சொன்னார். அன்பு மகனே! காமத்தீயானது ஒரு போதும் அணையாது; ஆறாது! நெய்யினால் அக்னி ஆறாமல் மேலும் மேலும் வளர்வதுபோல், ஆசைகள் அதிகரிக்கும் தவிர, தணிவது கிடையாது. மனிதன் விருப்பும் வெறுப்பும் அற்ற சாந்த நிலையை அடைய வேண்டும். அதுவே பிரம்ம நிலை. உன் இளமையை நீயே திரும்பப் பெற்றுக் கொண்டு, நாட்டை சிறப்புடன் நிர்வாகம் செய்! என்று கூறினார் யயாதி. பின்னர், தன் மூப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டார், வனம் சென்று, அங்கே பல்லாண்டுகள் தவம் செய்து, சுவர்க்கம் அடைந்தார்.