சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு இருந்தும் தரிசனத்திற்கு எட்டு மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2023 10:12
சபரிமலை : சபரிமலையில் திருப்பதி போன்று பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் கிடைக்கும் என்று கம்யூ., முதல்வர் பினராயிவிஜயன் கூறியது வெற்று அறிவிப்பாக மாறியது. முன்பதிவு இருந்தும் பக்தர்கள் எட்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
சபரிமலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் நடத்துகின்றனர். ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பதை இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே போலீசார் கணிக்க முடியும். ஆனால் கூட்டம் அதிகமாகும் போது இந்த கணிப்பெல்லாம் தவறி விடுகிறது.
கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு திருப்பதி மாடலில் பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். கடந்த சனி மற்றும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் போலீசாரின் முன்னேற்பாடுகள் அனைத்தும் செயலிழந்தன. எட்டு மணி நேரம் கியூவில் நின்ற பக்தர்களுக்கு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. 18 படிகளில் ஏறுவதற்கு முன்பு அவர்கள் மலை ஏறிய களைப்பில் தளர்ந்து காணப்பட்டனர்.
மர கூட்டத்துக்கும் சரங்குத்திக்கும் இடையே 10 கோடி ரூபாய் செலவில் ஆறு பக்தர்கள் காத்திருப்பு மையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பலன் தரவில்லை. இந்த காத்திருப்பு மையத்திலும் போதுமான வசதிகள் இல்லை. சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏற எத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள், இங்கு காத்திருக்கும் பக்தர்கள் எத்தனை மணிக்கு படி ஏறமுடியும் என்பது போன்ற விவரங்களை அறிவிக்க பெரிய எல்.இ.டி. டிவி, 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டது. அதுவும் செயல்படவில்லை.
வெள்ளியன்று 95 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மதியத்திற்கு பிறகு மழை பெய்ததால் 25 ஆயிரம் பக்தர்களின் யாத்திரை தாமதமானது. சனிக்கிழமை ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்த நிலையில் இவர்களும் சேர்ந்து வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. நேற்றும் அதிகமான கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் சரங்குத்தி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காத்திருப்பு மையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். பம்பை நீலிமலை பாதையில் பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் ஒழுங்குபடுத்திய பின்னரும் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் சபரிமலை யாத்திரையை சிரமப்படுத்துவதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.