சபரிமலையில் காடு மலை கடந்து வரும் பக்தர்களுக்கு.. நல்ல தரிசனம் கிடைக்க கியூ காம்ப்ளக்ஸ் உதவும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2023 11:12
சபரிமலை; காடு மலை கடந்து வரும் பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க புதிய கியூ காம்ப்ளக்ஸ் சிஸ்டம் உதவும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ்.பிரசாந்த் கூறினார்
சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கும் வகையில் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக மரக் கூட்டத்திலிருந்து சரங்குத்தி வரும் பாதையில் ஆறு கியூ காம்ப்ளக்ஸ்கள் அமைக்கப்பட்டு அங்கு கழிவறை குடிநீர்,பிஸ்கட் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் இருக்கும் கூட்டத்தை பொறுத்து பக்தர்கள் எத்தனை மணிக்கு அங்கு செல்ல முடியும் என்பதை அறிவிக்கும் வகையில் பெரிய எல்.இ.டி. டிஸ்ப்ளே வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்து பேசிய பிரசாந்த், கூட்டத்தை கட்டுப்படுத்தி எவ்வித விபத்துகளும் இல்லாமல் நல்ல தரிசனம் கிடைக்க கியூ காம்ப்ளக்ஸ் உதவும் என்று கூறினார். நீண்ட நேரம் கியூவில் நின்று தளர்ச்சி அடையும் நிலை முழுமையாக மாற்றப்படும் என்றும் நல்ல தரிசனம் கிடைப்பதுதான் தேவசம் போர்டின் லட்சியம் என்றும் தெரிவித்தார்.
சரங்குத்தியிலிருந்து பக்தர்கள் பெரிய நடை பந்தலுக்கு வரும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகளில் மின் விசிறி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய நடை பந்தலில் தற்போது மூன்று பெரிய ராட்சச மின்விசிறிகள் நிறுவப்பட்டுள்ள நிலையில் மண்டல சீசன் முடிந்தவுடன் மேலும் நான்கு மின் விசிறிகள் அமைக்கப்படுகிறது. இதனால் மலையேறி களைப்பில் வரும் பக்தர்களுக்கு நல்ல இதமான காற்று கிடைக்கும். கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக ஊருக்கு திரும்ப வேண்டும் என்று தேவசம்போர்டு தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தரிசனம் முடித்த பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கும் போது மேலும் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தேவசம்போர்டு இந்த முடிவை எடுத்துள்ளது. சபரிமலையில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் இரவு நேரத்தில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு விரி எனப்படும் தங்கும் இடங்களை . முக்கியமாக அன்னதான மண்டபத்தின் மேற்பகுதியிலும் பாண்டி தாவளம் பகுதியில் உள்ள ஷெட்டுகளிலும் பக்தர்கள் தங்குகின்றனர் . இங்கே 24 மணி நேரத்துக்கு ஒரு பக்தரிடம் 30 ரூபாய் வசூலிக்கப்படும். பத்து ரூபாய் பாய் வாடகை. நான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது பாண்டி தாவளத்தில் மாகுண்டா ஐயப்ப நிலையம் என்ற பெரிய ஷெட்டில் பக்தர்கள் இலவசமாக தங்கலாம்.