சபரிமலையில் பம்பை கடந்து வராத பட்ஜெட் பணம் 30 கோடி; பக்தர்களுக்கு வசதி செய்வதில் தொய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2023 09:12
சபரிமலை; கடந்த கேரள பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட 30 கோடி ரூபாய் இன்னும் பம்பை கடந்து வராததால் திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது இதனால் பக்தர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் ஆளும்.மா.கம்யூ.,அரசு கடந்த பட்ஜெட்டில் சபரிமலையில் திட்ட பணிகளுக்காக 30 கோடி ரூபாய் அனுமதித்ததாக அறிவித்தது. குன்னாறு அணையிலிருந்து சன்னிதானத்திற்கு தண்ணீர் கொண்டு வர 10 கோடி அனுமதிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் டெண்டர் எடுக்க யாரும் முன் வரவில்லை. வெள்ளப்பெருக்கு போன்ற அவசர காலங்களில்பம்பை கணபதி கோயிலில் இருந்து ஆற்றை கடந்து ஹில்டாப் செல்ல ஒரு பாதுகாப்பு பாலம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் அனுமதிக்கப் பட்டது. அது இன்னும் செயலுக்கு வரவில்லை.
பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்லும் பாதைகளில் மூலிகை குடிநீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு இரண்டு கோடி அனுமதிக்கப்பட்டும் அது இன்னும் கிடப்பில் கிடக்கிறது. இதுபோல பம்பை நதியில் ஒரு கூடுதல் பாலம், நிலக்கல்- இணைக்கும் பாலம் போன்றவையும் பைலில் தூங்குகிறது. இந்த ஆண்டு மண்டல காலத் தொடக்கத்தில் பம்பையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட தொகையில் என்ன பணிகள் நடந்தது என்று தேவசம்போர்டு அமைச்சர் கேட்டபோது எதுவும் நடக்கவில்லை என்ற பதில் தான் கிடைத்தது. தொகை அனுமதித்தும் டெண்டர் விட்டும் டெண்டர் விடாமலும் பணிகள் இழுத்தடிக்கப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.