பதிவு செய்த நாள்
17
டிச
2023
11:12
கூடலுார் : சபரிமலைக்கு புல்மேடு வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
சபரிமலை மண்டல பூஜைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நிலக்கல், பம்பை, சன்னிதானம் என பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் அவதிப்பட்டனர். திடீரென அதிகமாக வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்கூட்டியே மாஸ்டர் பிளான் எதுவும் தேவசம் போர்டு, கேரள போலீசார் செய்யவில்லை என்றனர். சபரிமலை செல்வதற்கு எரிமேலி, நிலக்கல், பம்பை வழியாக ஒரு பாதையும், எரிமேலியில் இருந்து அழுதாநதி, காளைகட்டி, கல்லிடும் குன்று வழியாக நடைபாதையும், வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, புல்மேடு, சத்திரம் வழி என மொத்தம் மூன்று பாதைகள் உள்ளன.
பம்பை வழியாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் புல்மேடு வழியாக நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சத்திரம், புல்மேடு வழியாக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் நடந்து செல்கின்றனர். குமுளி, வண்டிப்பெரியாறில் இருந்து 14 கி.மீ., துாரமுள்ள புல்மேட்டிற்கு அடிக்கடி ஜீப் வசதி உள்ளது. புல் மேட்டில் இருந்து 6 கி.மீ., தூரம் வனப்பகுதியில் நடந்து சென்றால் சபரிமலை சன்னிதானத்தை அடைந்து விடலாம். மிகக் குறைவான தூரத்தில் சென்று திரும்பி விடுவதால் இப்பாதையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.