கம்பம்: சபரிமலை வருமானம் இந்தாண்டு மண்டல,- மகரவிளக்கு உற்ஸவ காலத்தில் டிச., 16 வரை ரூ.134 கோடியே 44 லட்சத்து 90 ஆயிரம். என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.20 கோடி குறைவு. என, தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலைக்கு இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் முதல் 28 நாட்களில் வருமானம் குறைந்துள்ளது. இந்தாண்டு ரூ.134 கோடியே 44 லட்சத்து 90 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டு முதல் 28 நாட்களில் ரூ.154 கோடியே 77 லட்சத்து 97 ஆயிரம் கிடைத்தது. ரூ.20 கோடியே 33 லட்சம் இந்தாண்டு குறைவாகும்.
இதுகுறித்து தேவசம்போர்டு அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தெலுங்கானா, கர்நாடகா பக்தர்கள் 2018 - 2019, 2021-- 2022 உற்ஸவ காலங்களில் சபரிமலை சன்னிதானத்திற்கு வரவில்லை. தினசரி வருவாயில் ஒரு பகுதியை ஐயப்பனுக்கு கொடுக்க அவர்கள் சேமித்து வைப்பார்கள். 2018 முதல் கொடுக்காததை கடந்தாண்டு மொத்தமாக செலுத்தினர். எனவே சபரிமலை வருவாய் உயர்ந்தது. இந்தாண்டு வருவாய் குறைவாக இருந்தாலும், வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரணம் இப்போது கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளம், தெலுங்கானா தேர்தல் காரணமாக மந்தமாக இருந்த பக்தர்கள் வருகை தற்போது உயர துவங்கியுள்ளது. அரவணை அப்பம் விற்பனை உயர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.25 லட்சம் லிட்டர் அரவணை விற்பனையாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.