பதிவு செய்த நாள்
12
ஜன
2024
06:01
அவிட்டம் 3,4 ம் பாதம்: உடல் உறுதிக்கும் மன உறுதிக்கும் காரகனான செவ்வாய், சர்வ சக்திகளையும் வழங்கும் சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தைரியமும் செயல்களை முடிக்கும் ஆற்றலும் இருக்கும். இந்த மாதம் உங்கள் ஜென்ம ராசிக்குள் சனி பகவான் சஞ்சரிப்பதுடன் தைரிய, சப்தம, தொழில் ஸ்தானங்களைப் பார்ப்பதால் உங்களுக்குள் குழப்பம் அதிகரிக்கும். ஒருவித பயம் தோன்றும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகலாம், நண்பர்களுடனும் கூட்டுத் தொழிலிலும் சங்கடங்கள் தோன்றலாம். தொழிலில் தடைகளும் வருமானக் குறைவும் ஏற்படலாம். அதே நேரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கையும் ஏற்படும். அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பொறுப்பு வந்து சேரும். பணியாளர்களுக்கு மறைமுகத்தொல்லை அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். பெண்களுக்கு வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். கணவரின் நலனில் சங்கடங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 27
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,18,26, பிப். 8,9.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
சதயம்: போக காரகனான ராகு, கர்ம காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் ஆதாயத்தை நோக்கிய சிந்தனையே அதிகம் இருக்கும். இந்த மாதம் குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். வருமானத்தில் தடை, தாமதம் உண்டாகும். உங்கள் முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். எதிரிகளால் சங்கடங்களை சந்திக்க நேரும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் அரசுவழி செயல்களில் தடைகளுடன் சிலர் அபராதம் செலுத்தவும் நேரும். மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் பெரிய அளவில் நெருக்கடி இல்லாமல் போகும். அதேசமயம் பிற்பகுதியில் நெருக்கடி அதிகரிக்கும். ஏதோ ஒரு குழப்பம் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். பணியாளர்கள் தங்கள் பணியில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் அக்கறை இருக்க வேண்டும். இல்லையெனில் சங்கடங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வதும், நிதானமாக செயல்படுவதும் நன்மை தரும். புதிய முயற்சிகள் இந்த மாதம் வேண்டாம். பெண்களுக்கு குழப்பம் அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தோன்றும். முயற்சிகள் தள்ளிப் போகும். குடும்பத்தில் தேவையற்ற சங்கடம் ஏற்படும். அரசியல்வாதிகள் தலைமையிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 28,29.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,22,26,31, பிப்.4,8.
பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: ஆயுள் காரகனான சனிபகவான், தனகாரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமூகத்தில் எப்பொழுதும் தனி அந்தஸ்தும் கவுரவமும் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள் என்றாலும், அவருடைய பார்வைகள் சப்தம, பாக்ய, லாப ஸ்தானங்களில் பதிவதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். கடவுளின் அருள் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், புதனும் மாதத்தின் முற்பகுதியில் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தொழில், பணியில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார்கள். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். தொழிலாளர்கள் முயற்சி வெற்றியாகும். விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவர். மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். மாணவர்கள் படிப்பில் முழுகவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 29
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,21,26,30, பிப். 3,8,12.
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபாட்டால் அனைத்து தடைகளும் விலகும்.