மகம்: ஆத்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, இந்த மாதம் உங்கள் பாக்யாதிபதி செவ்வாய் பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடலில் இருந்த சங்கடம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் உண்டான நெருக்கடிகள் விலகும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். மாதத்தின் பின்பகுதியில் புதன் பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சிலருக்கு புதிய இடம் வாங்கும் யோகம் உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் சனிபகவானும், சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். வாழ்க்கைத்துணை மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை ஏற்படுத்தும். வார்த்தைகளிலும் இக்காலத்தில் நிதானம் அவசியம். உங்களுக்கு எதிராக சிலர் சதிகள் புரியலாம் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கலைஞர்கள் இக்காலத்தில் நிதானமுடன் செயல்படுவது நன்மையளிக்கும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தற்சமயம் இழுபறியாகும். பெண்களுக்கு இந்த மாதம் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையால் நன்மைகளை அடைவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். சந்திராஷ்டமம்: பிப்.14, மார்ச் 12,13 அதிர்ஷ்ட நாள்: பிப்.16,19,25. மார்ச் 1,7,10. பரிகாரம்: ஆதிநாதப் பெருமாளை எண்ணி செயல்பட யாவும் வெற்றியாகும்.
பூரம்:உங்கள் ராசிநாதன் சூரியன் ஏழாம் இடத்தில் சனி பகவானுடன் இணைந்து சஞ்சரிப்பதுடன் ராசியையும் பார்க்கிறார். இந்நிலையில் குருபகவானின் ஐந்தாம் பார்வையும் ராசிக்கு உண்டாகிறது என்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவர்களால் மதித்திடக்கூடிய இடத்தை அடைவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும் என்றாலும், குருபகவானின் பார்வை முழுமையாக உங்களுக்கு இருப்பதால் சிந்தித்து செயல்படுவீர்கள். எந்தவித சங்கடங்களும் உங்களுக்கு ஏற்படாது. எதிர்பார்த்த வருமானம் வரும். முயற்சிகள் வெற்றியாகும். குடும்பம், தன ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் பணவரவில் தடைகள் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்திற்குள் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வார்த்தைகளின் வழியாகவும் சங்கடங்கள் ஏற்படும். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும், உங்கள் ராசிக்கும் குருபகவானின் பார்வை இருப்பதால் குலதெய்வ அருளுடன் அனைத்தையும் சமாளிப்பீர்கள். நெருக்கடிகளில் இருந்து வெளியில் வருவீர்கள். குழந்தைக்காக நீண்ட காலமாக ஏங்கியவர்களுக்கு இப்போது அந்த பாக்கியம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பெண்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மனதில் உண்டாகும் குழப்பங்களுக்கு இடம் தராமல் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச்செல்வது நல்லது. விவசாயிகளுக்கு முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: பிப்.14,15, மார்ச் 13 அதிர்ஷ்ட நாள்: பிப்.19,24, மார்ச்1,6,10 பரிகாரம் ஆண்டாளை வழிபட்டால் நன்மை பன்மடங்காக வரும்.
உத்திரம் 1 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்திலும், ராசியிலும் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முயற்சிகளில் சில சங்கடங்கள் உண்டாகும். ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவானால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம், அதன் காரணமாக ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். சுயதொழில் செய்பவர்கள் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வெளியூரில் கிளைகளை அமைப்பீர்கள். அதனால் வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். குருபகவானின் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இடமாற்றமும் நன்மை தரும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் பதிவதால் சிலர் புதிய இடம் வாங்குவர். சிலருக்கு வீண் செலவு ஏற்படும் என்பதால் திட்டமிட்டு செலவழித்தால் விரயம் குறையும். எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் சிலர் தாங்கள் செய்யாத தவறுக்கு பதில் சொல்ல நேரிடலாம் என்பதால் பணிபுரியும் இடத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் என்பது இல்லாமல் போகும் என்றாலும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எல்லா விதமான சங்கடங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பூமி, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். காவல்துறையில் பணியாற்றுவோருக்கு இந்த மாதம் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வும் ஏற்படும். பெண்கள் அவசரத்தனத்தை விட்டு நிதானமாக செயல்படுவதால் நினைத்ததை சாதிக்க முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச்செல்வது இக்காலத்தில் நன்மை தரும். மற்றவர்களின் ஆலோசனையை ஏற்காமல் சுயமாக சிந்தித்து செயல்பட பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் ஏற்படும். வருவாய் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். சந்திராஷ்டமம்: மார்ச் 15,16 அதிர்ஷ்ட நாள்: பிப்.19, மார்ச் 1, 10. பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வு வளமாகும்.
மேலும்
மார்கழி ராசி பலன் (16.12.2024 முதல் 13.1.2025 வரை) »