பதிவு செய்த நாள்
02
ஏப்
2024
12:04
தொண்டாமுத்தூர்; புதுடெல்லியில், மூளை அறுவை சிகிச்சைக்கு பின், கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவிற்கு, கடந்த மார்ச் 17ம் தேதி, புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவிற்கு, ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் கோவை விமான நிலையத்தில் திரண்டு வரவேற்பு அளித்தனர். அதோடு கோவை விமான நிலையத்திலிருந்து ஈஷா வரையிலும், சாலையோரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி வரவேற்பு அளித்தனர். பழங்குடியின மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி, பாரம்பரிய முறையில், மலர் தூவியும், பாரம்பரிய இசை கருவிகள் இசைத்தும் சத்குருவிற்கு உணர்ச்சி பூர்வமான வரவேற்பு அளித்தனர். சத்குருவின் வருகையொட்டி, ஈஷா யோகா மையம் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது. ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும், சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லை இல்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். சத்குருவை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இதுகுறித்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாணிக்கண்டி மலை கிராமத்தை சேர்ந்த விஜயா கூறுகையில்," எங்களுடைய கிராம மக்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சத்குரு தான் காரணம். அவரால்தான் எங்களுடைய பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. அவர் கற்றுக்கொடுத்த யோகா மூலம் பல இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். அந்த ஆபத்திலிருந்து சத்குரு மீண்டு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கூடிய விரைவில் முழு நலன் பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை,"என்றார்.