நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் அவருக்கு, நடராஜர் என்ற பெயர் உண்டானது. நம் தேசத்து கலைபண்பாட்டின் சின்னமாக இருப்பவர் நடராஜர் தான். இத்தகைய சிறப்பு மிக்க நடராஜர், எகிப்தின் பிரமிடு வடிவ கருவறையில் அருள்பாலிக்கிறார் என்பது வியக்க வைக்கிறது. புதுச்சேரியில் தான் இத்தகைய சிறப்பு மிக்க தலம் அமைந்துள்ளது.
புதுச்சேரி, கிழக்குக் கடற்கரைச் சாலை, புதுக்குப்பத்தில் காரணேஸ்வரர் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நடராஜர் கருவறை பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது எங்கும் இல்லாத சிறப்பாகும். பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் சத்பிரேம் மையீனியின் தொழில்நுட்பத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஜம்முவின் ஹரி தார தரும அறக்கட்டளை இக்கோயிலை எகிப்தின் பிரமிடு வடிவத்தில் அமைத்துள்ளது. இதனுள் ஐம்பொன் நடராஜர் அருள்பாலிக்கிறார். இவர் காரணேஸ்வர நடராஜர் என அழைக்கப்படுகிறார். கோயிலுக்கு வெளியே பிரமாண்டமான சிவலிங்கமும், நந்தி பெருமானும் அருள்பாலிக்கிறார். ஜம்மு காஷ்மீர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரும் சிறந்த சிவ பத்திரமான கரண்சிங் இந்த கோயிலை கடந்து 2000ம் ஆண்டில் கட்டியுள்ளார். இந்த கோயிலுக்குச் சென்றால் நடராஜரின் தரிசனத்தோடு சேர்த்து தியானமும் செய்யலாம். கோயிலில் உள்ள மூலவர் நடராஜர் முகத்தில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி படுவது இங்கு மேலும் சிறப்பானதாகும். கருனைக்கடலான கார்னேஸ்வரர் நடராஜ பெருமானை தரிசிக்க பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வந்து நடராஜரை தரிசிப்பதாலும், தியானம் செய்வதாலும் நோய்கள் நீங்குகின்றது, மனஅமைதி கிடைக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.