தீப விழாவில் குட்டி விமானம் மூலம் நெரிசலை கண்காணிக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2012 10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர் கூட்டத்தை ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணித்து, கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க போலீஸார் ஆலோசனை செய்து வருகின்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அதனை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.மாவட்ட காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு தீப திருவிழாவில் பக்தர் கூட்டத்தை நகரில் கண்காணிக்க ராட்சத பலூனில் கேமரா பொருத்தி பறக்க விடப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல், திருட்டு சம்பவம் போன்றவை தடுக்கப்பட்டு, ஓரளவு போலீஸாருக்கு உதவியாக இருந்தது. இந்த முறையில், நகரின் உள்பகுதியில் மட்டுமே கண்காணிக்க முடிந்தது. இந்தாண்டு, நகருக்கு வெளியேவும் கண்காணிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் மூலம் கண்காணிக்க போலீஸார் ஆலோசனை செய்து வருகின்றனர்.