பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
11:07
அழகர்கோவில்: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவ திருவிழா ஜூலை 23ல் உற்ஸவ சாந்தியுடன் நிறைவு பெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அழகர்மலையில் உள்ள ராக்காயி அம்மன் சன்னதிக்கு கீழே நுாபுர கங்கை தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. இதில் பல மூலிகைகளின் வேர் பட்டு வருவதால் மருத்துவ குணம் நிறைந்தது. இத்தீர்த்தத்தில் தான் தினமும் சுந்தரராஜ பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இனிப்புச்சுவை கொண்ட இத்தீர்த்தத்தை பயன்படுத்தியே அழகர்கோவிலின் புகழ்பெற்ற தோசை உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன. மலை உச்சியில் உருவாகும் இத்தீர்த்தத்தை மலையடிவாரத்திலேயே கிடைக்கும் வகையில் உபயதாரர்கள் மூலம் ரூ.பல லட்சம் செலவில் கோயில் வளாகத்திற்கு வெளியே இரண்டும், உள்ளே பிரசாதம் தயார் செய்யும் இடத்திற்கு அருகேயும் குழாய்கள் மூலம் மக்கள் எளிதில் பிடித்துச் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குழாய்களில் தீர்த்தம் வருவதில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் பிரசாதம் தயார் செய்யவும், சுவாமிக்கு அபிஷேகம் செய்யவும் கோயில் ஊழியர்கள் 5 கி.மீ., மலை மீது டூவீலரில் சென்று தீர்த்தம் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோடு பணியால் பாதிப்பு.. கோயில் நிர்வாகம் சார்பில் கூறியதாவது: ஆடித் திருவிழாவில் அதிகப்படியான பக்தர்கள் நுாபுர கங்கையில் நீராடுவர். அப்போது தீர்த்தம் பற்றாக்குறை ஏற்படுவது இயல்புதான். ஏனெனில் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் தயார் செய்ய அதிகளவு தீர்த்தம் தேவைப்படும். அதேநேரம் மலைமீதும் நுாபுர கங்கையில் பக்தர்கள் நீராடுவதால் தண்ணீரின் வேகம் கீழ் வரை கிடைப்பதில்லை. திருவிழா முடிந்த சில நாட்களில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும். இந்தாண்டு மலைமீது ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால் அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தீர்த்தம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனையும் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.