பதிவு செய்த நாள்
01
ஆக
2024
10:08
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா யொட்டி நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 29 முதல் ஆக., 14 வரை நடக்கிறது. இதில் முக்கிய விழாவான ஆக., 4ல் ஆடி அமாவாசை அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து 5:00 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரித்த வெள்ளி தேரில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா நடக்கும். ஆக., 8 ஆடி தபசு அன்று அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 மணி முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், காலை 5:55 மணிக்கு அம்மன் கமல வாகனத்திலும், காலை 11 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், மதியம் 3:00 மணி முதல் 3:30 மணி வரை சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். அன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.
ஆக., 12ல் மஞ்சள் நீராட்டு விழா யொட்டி மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். இதன்பின் நடை திறந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆக., 14ல் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, இதனைதொடர்ந்து கால பூஜையும் நடக்கும். காலை 6:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகி, மாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடக்கும். அன்று காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.