பதிவு செய்த நாள்
06
ஆக
2024
04:08
சிவகங்கை, காளையார்கோவில் சொர்ணவல்லி, காளீஸ்வரர் கோயிலில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு இன்று அம்மன் தேரை ஏராளமான பெண்கள் இழுத்தனர். சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ணவல்லி காளீஸ்வரர் கோயிலில் ஆடி உற்சவ விழா ஜூலை 29 அன்று காலை 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. விழாவின் 9ம் நாளான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சொர்ணவல்லி அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். காலை 8:45 மணிக்கு சப்பரத்தில் விநாயகர், மாணிக்கவாசகர் முன்செல்ல, அலங்கரிக்கப்பட்ட அம்பாள் தேரை அனைத்து பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, நிலையை அடைந்தது. பக்தர்கள் தேங்காய், வாழைப்பழம் வீசி நேர்த்தி செலுத்தினர்.
நாளை காலை காளீஸ்வரர் சொர்ணவல்லி கோயிலில் ஆடிப்பூர சிறப்பு அர்ச்சனை நடைபெறும். ஆக., 8 அன்று ஆடித்தபசு காட்சியும், ஆக., 9 அன்று மதியம் 12:00 மணி முதல் 1:00 மணிக்குள் திருக்கல்யாணம், இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் செய்து வருகின்றனர்.