பதிவு செய்த நாள்
02
செப்
2024
03:09
தென்னகத்தின் முக்கியமான நான்கு வைணவ திருத்தலங்களில், மேலுகோட்டே செலுவராய சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த புண்ணிய தலத்தில், யோக நரசிம்மர் உட்பட பல கோவில்கள் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
மாண்டியா, பாண்டவபுராவின் மேலுகோட்டே ஆன்மிகவாதிகளின் சொர்க்கமாகும். இங்கு ஏராளமான கோவில்கள், தீர்த்த குளங்கள், மடங்கள் உள்ளன. இயற்கை எழில் மிகுந்துள்ளதால், ஆன்மிகவாதிகள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரையும் ஈர்க்கிறது. ஆண்டு தோறும் மேலுகோட்டேவில் குடிகொண்டுள்ள செலுவராய சுவாமியை தரிசிக்க, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
பக்தர்கள் அதிகம்; பண்டிகை நாட்கள், சிறப்பு நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். மேலுகோட்டேவுக்கு சென்று, ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தால், பார்வையை திருப்பவே முடியாது. அவ்வளவு ரம்யமான இயற்கை காட்சிகள், மனதை கொள்ளை கொள்ளும். மனதில் பக்தி பரவசம் ஏற்படுவதை உணர்வீர்கள். விண்ணை நோக்கி உயரமாக காணப்படும் மலைகள், அந்த மலைகளின் மீது அமைந்துள்ள கோவில்கள், ஸ்படிகம் போன்று பளபளக்கும் அழகான தீர்த்த குளங்கள், ஏரிகள், பச்சை பசேல் என்ற விவசாய நிலங்கள் என, அற்புதமான காட்சிகள் நம்மை பேச விடாமல், மதி மயக்கும். மாண்டியாவில் இருந்து 28 கி.மீ., துாரத்தில், மேலுகோட்டே உள்ளது. இது, கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள கோவில்கள், குளங்கள், ஏரிகள், மடங்கள் மேலுகோட்டேவின் பெருமையை உணர்த்துகின்றன. செலுவராய சுவாமி கோவில், யோக நரசிம்மர், பத்ரி நாராயணர் கோவில், பட்டாபிராமர் கோவில், பேட்டை ஆஞ்சநேயர், மாரம்மா கோவில்கள் உள்ளன.
எக்கச்சக்கம்; சாண்டில்யர், குலசேகர ஆழ்வார், வேதாந்த தேசிகர் சன்னிதி, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் சன்னிதி, பேட்டை கிருஷ்ணர், கரனிக நாராயணர், மஹேஸ்வரர், வெங்கடேசர் கோவில், அஹோபில நரசிம்மர், காளியம்மன், சுக்ரீவர், கருடர், ஆதிசேஷா, வராஹர், ஹியக்ரீவா, சனீஸ்வரா என, பல்வேறு சன்னிதிகள் உள்ளன. மேலுகோட்டே, கோவில்களின் தாயகம் என கூறினாலும் மிகையில்லை. வேறு எங்கும் காண முடியாத அளவில், அற்புதமான தீர்த்த குளங்களை மேலுகோட்டேவில் காணலாம். விஷால பவ்ய குளம், தெப்பக்குளம், அக்கா - தங்கை குளம், நிங்கன்ன குளம்.
நட்சத்திர குளம், பசவராஜன் குளம், வேத புஷ்கரணி, சிக்கய்யன குளம், தர்ப தீர்த்தம், யாதவ தீர்த்தம், மைத்ரேயி தீர்த்தம், பத்ம தீர்த்தம், நாராயண தீர்த்தம், தொட்டிலமடு, பட்டர குளம் என, இங்குள்ள தீர்த்த குளங்களுக்கு அளவே இல்லை. ஏரிகள், கிணறுகளும் கூட, பெருமளவில் உள்ளன. இயற்கை வளங்கள்; ஆன்மிகத்தை வளர்ப்பதில், மடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலுகோட்டேவில், எத்திராஜ மடம், வானமாமலை மடம், படகால மடம், அகோபில மடம், ஆண்டவர் ஆசிரமம், திரிதன்டி சின்ன ஜீயர் மடம், திருப்பதி பெரிய ஜீயர் மடம், பைராகி என, வரலாற்று பிரசித்தி பெற்ற பல்வேறு மடங்கள் உள்ளன. மண்டபங்கள், குகை கோவில்களும் இங்குள்ளன. மேலுகோட்டே, இயற்கை வளங்கள் நிறைந்த, ஆன்மிக மணம் கமழும் தலமாகும். பக்தர்கள் இங்கு வந்து செலுவராய சுவாமியை தரிசித்து, பிரார்த்தனை செய்து அருள் பெற்று செல்கின்றனர். அதே போன்று சுற்றுலா பயணியர், இயற்கை அழகை ரசித்து மன நிறைவோடு செல்கின்றனர். மேலுகோட்டே கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் வைரமுடி உற்சவம், மிகவும் பிரபலம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
எப்படி செல்வது?; பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் செல்வோர், மாண்டியா ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்வோர், சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் மேலுகோட்டே பஸ் நிலையத்துக்கு செல்லலாம். அங்கிருந்து நடந்தே மலைக்கு செல்லலாம். விமானத்தில் செல்ல விரும்புவோர், மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சி, கேப் ல் செல்லலாம்.
வைரமுடி ஸ்பெஷல்; மேலுகோட்டே கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் வைரமுடி உற்சவம், மிகவும் பிரபலம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். - நமது நிருபர் -.