பதிவு செய்த நாள்
08
செப்
2024
03:09
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், திருப்புறம்பியத்தில், மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான, நால்வரால் பாடல் பெற்ற தலமான சாட்சிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தேனபிஷேக பெருமான் என அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பிரளயம் காத்த விநாயகர் நத்தைக் கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல் பொருட்களால் உருவான மேனியைக் கொண்டவர். வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும், இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தில், மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு தேன் அபிஷேகம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்துக்காக தேன் வழங்கினர். தேன் அபிஷேகம் இன்று(8ம் தேதி) அதிகாலை சுமார் 5:00 மணி வரை விடிய விடிய நடந்தது. அபிஷேகத்தின்போது, விநாயகர் மீது ஊற்றப்படும் தேன் முழுவதும் அவரது திருமேனியின் உள்ளே உறிஞ்சப்பட்டு, சிலை சிறிது சிறிதாக தேன் நிறத்துக்கு மாறியது. தேன் அபிஷேகம் நிறைவடைந்தபோது, பிரளயம் காத்த விநாயகர் செம்பவள மேனியராக காட்சியளித்தார். இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.