பதிவு செய்த நாள்
04
அக்
2024
02:10
ஸ்ரீதேவி மகாத்மியம், தேவி பாகவதம் போன்ற நுால்களில் உள்ள வியக்கத்தக்க புண்ணிய சரித்திரங்களில் இந்த மகிஷாசுர வதம் என்பது தலைசிறந்தது. கதை பெரிது; பவித்திரமானது.
பொதுவாக, மனிதனுக்கு மூன்று குணங்கள் உண்டு. அவை சத்துவம், ராஜசம், தாமசம் என்பவை. அவற்றுள் தாமச குணம் மிகவும் இழிந்தது. கரிய நிறம், இருட்டு வேளை, பழஞ்சோறு, மந்தபுத்தி, துாக்கம், சோம்பல், கொட்டாவி முதலியவை அந்தத் தாமச குணத்தின் இயல்புகள். ஒரு ஜீவனுக்கு ஞானம் குறைந்து தாமச குணம் தலைதுாக்கும் போதெல்லாம், அன்னை பராசக்தி வந்து அந்த குணத்தை குலைத்து, உயர்ந்த சத்துவ குணத்தை அந்த ஜீவனுக்கு அருளி, தன்னை நினைக்கச் செய்கிறாள். முன்னொரு காலத்தில் தனு எனும் அரசன் இருந்தான். அவனுக்கு ரம்பன், கரம்பன் எனும் புதல்வர்கள் இருவர் இருந்தனர். அவ்விருவரில் கரம்பன் தண்ணீரில் மூழ்கி, மாபெருந்தவம் இருந்தான்; ரம்பனோ பஞ்சாக்கினியில் நடுவில் நின்று தவம் செய்யலானான். ரம்பனுடைய தவத்தின் வேகத்தை உணர்ந்த இந்திரன், முதலை உருக்கொண்டு நீரில் மறைந்து வந்து கரம்பனை கொன்று விட்டான். அதை உணர்ந்த ரம்பன், மிக கடுமையாக தவம் செய்து தன் தலையையே வெட்டி, ஆகுதி செய்ய முயன்றான். அதை மெச்சிய அக்னிதேவன், ரம்பனுக்கு காட்சியளித்து, தற்கொலையின் கொடுமையை விளக்கி, அவனுக்கு ஒப்புயர்வற்ற மகன் உண்டாகுமாறு வரம் அளித்து மறைந்தான்.
சிம்ம வாகனத்தில் பராசக்தி; விதியை யாராலும் வெல்ல முடியாதன்றோ! ரம்பன் முன், பருத்து கருத்த பெண் எருமை ஒன்று வந்தது. ரம்பன் அதை புணர விரும்பவே, அதுவும் இச்சையுடன் அதற்கு இசைந்தது. அதனால், அந்த பெண் எருமை கருத்தரித்தது. அந்நிலையில் ஓர் எருமைக்கடா அந்தப் பெண் எருமையை விரும்பியது. அது கண்ட ரம்பன், அதை அக்கடாவினின்றும் காப்பாற்ற விரும்பி, அந்த எருமையுடன் பாதாளம் புகுந்தான். கடாவோ விடவில்லை. ரம்பனுக்கும், கடாவுக்கும் பெரும்போர் நடந்தது. போரின் முடிவில் ரம்பனை, கடா கொன்று விட்டது. அதை அறிந்த பெண் எருமை, ரம்பனோடு உடன்கட்டை ஏறத் துணிந்து, சிதையில் ஏறியது. அப்போது, அதற்கு ஆண் குழந்தை பிறந்தது. அவ்வாறு பிறந்த குழந்தையே, மகிஷன் எனும் அசுரன் ஆவான். பிறக்கும்போதே மகிஷன், தேவர்களிடம் பகைமை கொண்டு அவர்களை ஒழிக்கவும், அதற்கேற்ற பலம் பெறவும் விரும்பி, பிரம்மதேவனை குறித்து கடுந்தவம் இருந்தான். பிரம்மா அவனுக்கு பிரத்தியட்சமாகி, தேவையான வரத்தை வேண்டுமாறு கூறினார். அதற்கு மகிஷன், ‘பெண்களை தவிர வேறு எவராலும் நான் மரணம் அடையக்கூடாது’ என்று வரம் கேட்டான். பிரம்ம தேவரும், அவன் விரும்பிய வரத்தை அளித்து மறைந்தார்.
வரத்தை பெற்ற மகிஷன், இந்திரனுடன் போர் புரியத் துணிந்தான். அவனும் விடவில்லை; தேவர்கள், திருமால் என அனைவரையும் துணைக்கு அழைத்தான்; ஆனாலும் மகிஷனை மிஞ்ச முடியவில்லை; பிரம்மனாலும் முடியவில்லை. அனைவரும் சிவபெருமானை துதித்தனர். சிவபெருமான், ‘அம்பிகையை போருக்கு அனுப்பலாம்’ என்று யோசனை கூறினார். அதன்படியே அனைவரும் பராசக்தியை துதித்தனர். மகிஷனை அழிக்க, பராசக்தி, சிம்ம வாகனத்தில் புறப்பட்டாள். மகிஷன், தன் அமைச்சர்களில் ஒருவனை தேர்ந்தெடுத்து, ‘நீ தேவியிடம் சென்று, நயமாகவும், பயமாகவும் பேசி, என்னை எப்படியாவது மணந்து கொள்ளும்படி பேசினால் இணங்கி விடுவாள்...’ என்று கூறி அனுப்பினான். தேவி அவனைப் பார்த்து, ‘நீ யார்? எங்கு வந்தாய்? பயப் படாமல் கூறு!’ என்றாள். அமைச்சரோ, ‘எங்கள் தலைவர் மகிஷன், தங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்’ என்றார். பராசக்தி, கைகொட்டி நகைத்து, ‘விவாதத்திற்கும், விவாகத்திற்கும் இரு சாராரும் சரிசமமாக இருத்தல் வேண்டும்; அது தான் அழகு. நான் பரமேஸ்வரனுடைய பத்தினி. அவருக்குள் நானும், எனக்குள் அவருமாக இருக்கிறோம். ‘ஏனையோருக்கு தனித்தனியே ஆண், பெண் உருவமாக காட்சி அளிப்போமேயன்றி, நாங்கள் இருவரும் ஒன்றே. எங்களை குறித்த உண்மையை வேதம் கூறும். இதை நீ உன் தலைவனிடம் கூறு. ஓடிவிடு; உன்னை மன்னித்தேன்...’ என்று கூறி விடுத்தாள்.
மகிஷனின் மாயப் போர்கள்; மகிஷனோ, விட மறுத்து, அன்னையுடன் போர் புரியத் துவங்கினான். பயங்கரமான போர். அதுபோன்றதொரு போர் இதுவரை நடந்ததில்லை. போரில் அசுரர்கள் பலர் மடிந்தனர். தாமிரன், சிட்சு, அசிலோமன் போன்றோரும் இறந்து விட்டனர். மகிஷாசுரனே தேவியுடன் போர் செய்ய முன்வந்தான். மகிஷனுக்கும், தேவிக்கும் வீரவாதம் நடந்தது. மகிஷன் தேவியின் மீது தீராக் காமம் கொண்டு, ‘அழகியே, நீ என்னை பலவாறு பழித்தாய். நான் அவை எல்லாவற்றையும் மன்னித்து மறந்துவிட்டேன். என்னை மணப்பாயாக’ என்றான். அத்தகைய தகாத சொல்லை கேட்ட தேவி, ‘எருமையே... விருப்பம் இல்லாதவளை மணப்பதால் என்ன சுகம்? நான் ஒருவருடைய மனைவி. உன்னை வதம் செய்வதற்காகவே நான் வந்திருக்கிறேன். இந்நிலையில் தகாத உரை பேசிக் கொண்டிருக்கிறாய். எடு படையை.... துவங்கு போரை’ என்று கூறி வீர முழக்கம் செய்தாள். மகிஷனும் வேறு வழியின்றி போர் செய்தான். மகிஷன் பல மாயப் போர்கள் நிகழ்த்தியும் தோல்வியே அடைந்தான். காலம் நீடிப்பதை கண்டு தேவர்கள் கலங்கினர். அப்போது, அன்னை பராசக்தி அடக்கமுடியாத சினங்கொண்டு, அவனை கீழே தள்ளி மூர்ச்சிக்கச் செய்தார். அவன் மூர்ச்சை தெளிந்து மீண்டும் போருக்கு வந்த போது, தன் சக்ராயுதத்தால் அவனது தலையை அறுத்து வீழ்த்தினார். சக்ராயுதம் அதோடு நில்லாமல், ஏனைய அசுரர்களையும் வீழ்த்த துவங்கியது. எஞ்சிய அசுரர்கள் ஓடி ஒளிந்தனர்.