கல்பாத்தி விஸ்வநாதர் தேர் திருவிழா: ஐந்தாம் திருநாள் நிகழ்வு கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2024 10:11
பாலக்காடு; பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ள ஐந்தாம் திருநாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மந்தக்கரை மகாகணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில்களில் எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 7ம் தேதி இக்கோவில்களில் நடைபெற்றது. நாளை (13ம் தேதி) முதல் மூன்று நாட்களில் திருத்தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் சிறப்பு அம்சமான தேவரத சங்கமம் 15ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டுள்ள ஐந்தாம் திருநாள் நிகழ்வு நேற்று நள்ளிரவில் வெகு விமர்சியாக நடைபெற்றது. நள்ளிரவு 11:30 மணியளவில் விசாகாக்ஷி சமேத விஸ்வநாதர் ரிஷபாரூடராகவும் லட்சுமி நாராயண பெருமாள் ஆதிகேசவராகவும் மகா கணபதி மற்றும் பிரசன்ன மஹா கணபதி மூஷகாரூடராகவும் அலங்கரிக்கப்பட்ட சிறு திருதேர்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து வேத பாராயணம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உற்சவ மூர்த்திகளின் திருத்தேர்கள் புதிய காலபாத்தியில் சங்கமித்தன. இந்த ஐந்தாம் திருநாளில் கலந்துகொண்டு உற்சவமூர்த்திகளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.