சபரிமலை; போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் 1227 கோயில்களின் நித்ய பூஜை, சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு சபரிமலை வருமானம் ஆறுதலாக உள்ளது.
கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம்போர்ட்டின் கீழ் 1252 கோயில்கள் உள்ளது. இதில் 25 கோயில்கள் மட்டுமே அதன் வருமானத்தில் அதன் செலவுகளை செய்ய முடிகிறது. மீதமுள்ள அனைத்து கோயில்களும் சபரிமலை வருமானத்தை நம்பியுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்ட்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் மொத்த காணிக்கை வருமானத்தில் 53 சதவீதம் சபரிமலையில் இருந்து வருகிறது. 2023 -ல் இந்த வருமானம் 845 கோடி ரூபாயாக இருந்தது. இதில் சபரிமலையில் இருந்து மட்டும் 450 கோடி ரூபாய் கிடைத்தது.
இதற்கு அடுத்தபடியாக ஏற்றுமானூர் மற்றும் திருவல்லம் கோயில்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளது. இங்கு 12 முதல் 13 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வருமானம் உள்ள 23 கோயில்கள் உள்ளது. சம்பளம் பென்ஷன் மற்றும் நிர்வாக செலவுகளுக்கான வருமானத்தில் 25 கோயில்கள் மட்டுமே தன்னிறைவு பெற்றுள்ளது. 63 கோயில்கள் பூஜை மற்றும் நிர்வாக செலவு வருமானத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள அனைத்து கோயில்களின் பூஜை மற்றும் நிர்வாக செலவுக்கு சபரிமலை வருமானம் உள்ளிட்ட தேவசம் போர்டின் நிதி செலவு செய்யப்படுகிறது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒரு ஆண்டில் 1375 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகிறது. இதில் சம்பளம் மற்றும் பென்ஷன் மட்டும் 900 கோடி ரூபாய். பத்து சதவீதம் பணம் மட்டுமே சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பராமரிப்பு பணிகளுக்கு செலவிடப்படுகிறது. குறைந்த வருமானம் அதே நேரத்தில் 20-க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ள கோயில்களும் உள்ளது. சம்பளத்தின் பகுதி தொகை கூட வருமானம் இல்லாத 500க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இவையெல்லாம் சபரிமலை காணிக்கையை மட்டுமே நம்பியுள்ளது.
இது பற்றி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது; ஒரு நேரமாவது விளக்கேற்றாத கோயில்கள் திருவிதாங்கூர் தேவசம்போர்டில் இல்லை. வருமானம் குறைவாக உள்ளது என்ற பெயரில் பூஜை மற்றும் உற்சவ செலவுகள் குறைக்கப்படவில்லை. எல்லா கோயில்களையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.