ஒன்பது வயதில் 18 முறை சபரிமலை வந்த சிறுமி; தென்னங்கன்றுடன் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2024 12:11
சபரிமலை; ஒன்பது வயதில் 18-வது முறையாக சபரிமலை வந்த சிறுமி தென்னங்கன்றுடன் வந்து தரிசனம் செய்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாப்பனங்கோடு எஸ்டேட்டைச் சேர்ந்தவர் ஜீவன் குமார் –- ராஜஸ்ரீ தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் நவநீது. ஒன்பது வயதான இவர் பாப்பனங்கோடு சுவாமி விவேகானந்தா மிஷன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். தன் 4 வயதில் தந்தையின் தோளில் அமர்ந்து முதன் முறையாக சபரிமலைக்கு வந்தார். அதன் பின்னர் பள்ளி வகுப்பு முடங்காமல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களில் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் 18 வது முறையாக அவர் சபரிமலைக்கு வந்தார். 18 முறை சபரிமலை வந்தவர்கள் இங்கு தென்னங்கன்று நடுவது வழக்கம். அதன்படி இந்த சிறுமியும் தென்னங்கற்றுடன் வந்து தரிசனம் செய்த பின் கோயிலின் பின்புறம் தென்னங்கன்றுகளை நட்டார்.
சிறுமி கூறுகையில், ‘‘ஒருமுறை சபரிமலை வந்து ஐயப்பனை வணங்கிய பின்னர் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தந்தையுடன் சபரிமலை வந்தேன். சகோதரி நவநீதா 8ம் வகுப்பு படிக்கிறார். அவர் ஏழு முறை சபரிமலை வந்துள்ளார்,’’ என்றார்.