பதிவு செய்த நாள்
26
நவ
2024
12:11
சபரிமலை; சபரிமலையில் மண்டலபூஜை நடந்து வருகிறது. நேற்று அய்யப்பனை தரிசிக்க 18ம் படி முன் இருமுடியுடன் பக்தர்கள் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்திருந்து தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணி; சபரிமலையில் நடப்பு மண்டல காலத்தின் பாதுகாப்பு பணியில் இரண்டாம் கட்ட போலீசார் நேற்று பொறுப்பேற்றனர். 8 டி.எஸ்.பி., 27 இன்ஸ்பெக்டர், 90 எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ., 1250 போலீசார் வந்துள்ளனர். இவர்கள் டிசம்பர் 6 வரை 12 நாட்கள் பணியில் இருப்பர். எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக வந்த போலீசாருக்கு தற்போதைய தனி அதிகாரி எஸ்.பி., பைஜூ ஆலோசனை வழங்கினார். போலீசாருடன், இன்டெலிஜென்ஸ், மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் பணியில் உள்ளனர்.
அபராதம்; சன்னிதானத்தில் உள்ள 17 ஓட்டல்களில் நடைபெற்ற சோதனையில் காலாவதி பொருட்களையும், கெட்டுப்போன பொருட்களையும் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். விலைப்பட்டியல் சரியாக வைக்காதது உட்பட பல காரணங்களுக்காக வியாபாரிகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 1992 முதல் சபரிமலை சன்னிதானத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஐயப்பா ஹெல்த் அமினிட்டி சொசைட்டி நடத்தி வந்த மருத்துவமனை கட்டடத்தை காலி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மருத்துவமனை நிர்வாகம் குறித்து பல குளறுபடிகள், வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள பொருட்களை கீழ்த்தளத்தில் உள்ள அறையில் மாற்றிவிட்டு, இதர அறைகளுடைய சாவியை தர வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானம் அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான வசதி வருவதற்கு முன்பே, இந்த அமைப்பு சார்பில் இதய நோய் தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.