பதிவு செய்த நாள்
03
டிச
2024
10:12
சபரிமலை; ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் வர வேண்டும், அல்லாத பட்சத்தில் வரும் நாட்களில் காத்திருக்க வேண்டிய நிலை வரும் என்று கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் கூறியுள்ளார்.
விருச்சுவல் கியூவில் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நாளிலும் குறிப்பிட்ட நேரத்திலும் வராமல் உள்ளனர். சிலர் முந்தைய நாளும் சிலர் அடுத்த நாளும் சிலர் இரண்டு நாட்கள் கழித்தும் கூப்பன்களை கொண்டு வருகின்றனர். இருமுடி கட்டு வருவதால் வேறு வழி இன்றி அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது தேவையற்ற நெரிசலையும், பக்தர்களின் சுமுகமான தரிசனத்தையும் பாதிக்கக்கூடும் என்பதால் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பத்தணம்திட்டா மாவட்ட போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்று முன்தினம் சபரிமலையில் மழை பெய்த நிலையில் மதியம் 1:00 மணி வரை உள்ள பக்தர்களின் வருகை பரிசோதிக்கப்பட்டது. மொத்தம் 36 ஆயிரத்து 828 பேர் வந்ததில் 7 ஆயிரத்து 546 பேர் நாள் மற்றும் நேரம் மாறி வந்துள்ளனர் என தெரியவந்தது. நவ.,15 நடை திறந்த நாள் முதல் நேற்று முன்தினம் மதியம் வரை தரிசனம் நடத்திய பக்தர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 572. இதில் தாங்கள் பதிவு செய்த நேரத்திலும், நாளிலும் மாறி வந்தவர்கள் 2 லட்சத்தது 3 ஆயிரத்து 260 பேர். நாளும்,நேரமும் தவறிவரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போலீசாருக்கும், தேவசம்போர்டுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சபரிமலை போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரி ஏ.டி.ஜி.பி. எஸ். ஸ்ரீஜீத் கூறியதாவது: ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தாங்கள் தேர்வு செய்த நேரப்படி வரவேண்டும். வரும் நாட்களில் பதிவு செய்த நேரத்தில் வராத பட்சத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். எல்லா பக்தர்களுக்கும் தரிசனம் உறுதி செய்யப்படும் என்றாலும் முன் பதிவு நேரம் அடிப்படையிலேயே பக்தர்கள் பம்பையில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.