பதிவு செய்த நாள்
12
டிச
2024
11:12
மாமல்லபுரம்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டிற்கு வரும் கர்நாடக பயணியர், மாமல்லபுரத்திற்கும் படையெடுப்பதால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில், சித்தர் பீட ஆதிபராசக்தி கோவில் பிரசித்தி பெற்றது. தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், இங்கு அம்மனை வழிபட வருகின்றனர். குறிப்பாக, ஆண்டுதோறும் கொண்டாடும் முக்கிய உற்சவமான தைப்பூச வழிபாட்டிற்காக, டிச., – ஜனவரியில் கர்நாடக பயணியர், இங்கு படையெடுக்கின்றனர். பின் அங்கிருந்து கடலில் நீராட, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாமல்லபுரத்திலும் திரள்கின்றனர். இப்பகுதியில் பிரதான சாலை பகுதிகளில், திறந்தவெளியில் அவர்கள் முகாமிட்டு, சமைத்து உண்டு, அங்கேயே உறங்குகின்றனர். அவர்களுக்கு போதிய அளவில் தற்காலிக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை. குடிநீருக்காக அலைவதுடன், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, சுற்றுலா பகுதி என்பதையே கருதாமல் சமையல், சாப்பாட்டு கழிவுகள், காகித தட்டுகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பையை சாலைகளில் குவிப்பர்.
கர்நாடக மாநில அரசு பேருந்துகளில் அவர்கள் வரும் நிலையில், தினசரி ஏராளமான பேருந்துகள் குவியும். இங்கு நிறுத்துமிட வசதியும் இல்லாததால், பிரதான சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமித்தே அவர்களின் பேருந்துகள் நிறுத்தப்படும். பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து முடங்கும். பாதசாரி பயணியரும் நடக்க முடியாமல் திணறுவர். மருத்துவ அவசரத்திற்கு, ஆம்புலன்ஸ் வாகனமும் செல்ல முடியாது. இந்நிலையில், இந்த வாரம் முதல், கர்நாடக பக்தர்கள் மாமல்லபுரத்தில் குவிய வாய்ப்புள்ளது. மேலும் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் விடுமுறை என, சுற்றுலா பயணியரும் அதிகம் வருவர். எனவே, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.