பதிவு செய்த நாள்
03
டிச
2012
10:12
திருப்பூர்: ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் விநாயகர் கோவிலில், உயிருள்ள நாக பாம்புக்கு, நேற்று, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.விருச்சிக ராசியிலிருந்து ராகு பகவான் துலாம் ராசிக்கும், ரிஷப ராசியிலிருந்து கேது பகவான், மேஷ ராசிக்கும் நேற்று பெயர்ச்சியடைந்தார். இதை முன்னிட்டு, திருப்பூரிலுள்ள ஆர்.வி.இ., லே-அவுட் ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம், பரிகார பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, உயிருள்ள நாக பாம்பிற்கு பூஜை நடந்தது. இதற்காக, பாம்பு பிடிக்கும் நபர், ஐந்து அடி நீளமுள்ள உயிருள்ள நாக பாம்பை கொண்டு வந்திருந்தார். பையில் இருந்து, அதை எடுத்ததும், பாம்பு துள்ளியது. அதற்கு பூஜை செய்ய ஏதுவாக, தயாராக இருந்த தகரத்தில் வைத்து, அதை பிடித்துக்கொண்டார்.யாக பூஜையை தொடர்ந்து, சிவாச்சாரியர்கள், உயிருள்ள நாக பாம்புக்கு, சிறப்பு பூஜை செய்தனர். பாம்புக்கு பால் விட்டு, மாலை அணிவித்து, பூஜை செய்தனர். அதற்கு, தீபாராதனையும் காட்டப்பட்டது. ராகு, கேது பெயர்ச்சிக்கு நவக்கிரக சிலைகளுக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இங்கு வித்தியாசமாக, நாக பாம்பிற்கு நேரடியாக பூஜை நடத்தப்பட்டது.