பதிவு செய்த நாள்
04
பிப்
2025
01:02
காரைக்குடி; தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று நகர்வலம் வந்தனர். தைப்பூசத் திருவிழாவிற்கு நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழநிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக சென்று வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாகவே திரும்புவர். காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடி வந்தடைவர்.
குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து பிப்.5ம் தேதி பாதயாத்திரையை தொடங்குகின்றனர். பிப்.13ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். இதனையொட்டி நேற்று காரைக்குடியில் நகரத்தார் காவடிகள் நகர்வலம் வந்தனர். நகரச்சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு, முத்து மாரியம்மன் கோயில் செக்காலை சிவன் கோயில் டி.டி நகர் விநாயகர் கோவில், கொப்புடைய நாயகி அம்மன் கோயிலை வந்தடைந்து இரவு சிலம்பணி பிள்ளையார் கோயிலில் தங்கி இன்று காலை குன்றக்குடிக்கு காவடிகள் புறப்படுகின்றன.
* தேவகோட்டையில் இருந்து பழநிக்கு தைப்பூசத் திருவிழாவிற்கு காவடிகள் , பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். நேற்று முன்தினம் நகர பள்ளிக்கூடம் முருகன்சந்நிதியில் நகரத்தார் காவடிகள் கட்டப்பட்டு பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று காலையில் நகர பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்டு தலைமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சென்று அங்கிருந்து அனைத்து காவடிகளும் முக்கிய வீதிகளின் வழியாக நகர் வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் தங்கினர். பல நூற்றாண்டுகளுக்கு முன் பழநி தைப்பூச விழாவிற்கு முதன்முதலாக காவடி கட்டி பாதயாத்திரை துவக்கிய அழகிய சுந்தர வேலாயுத தண்டாயுதபாணி கோயிலில் இருந்து முதலியார் பாரம்பரிய காவடி கட்டி பூஜைக்கு பின் காவடி நகர்வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் வந்து தங்கினர். இன்று காலை 6:00 மணிக்கு புறப்படுகிறது.