பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம்; எந்த ஒரு வேலையிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிநாதன் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும் குடும்பத்தில் குழப்பம் நீடிக்கும். குரு பகவானின் பார்வை 7, 9, 11ம் இடங்களுக்கு கிடைப்பதால் அனைத்தையும் சமாளிப்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும் வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு சொந்த இடம், வீடு அமையும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். செய்து வரும் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி பலிக்கும். சுகஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எப்பொழுதும் கவனமாக இருப்பது நல்லது. வீண் செலவு இந்த மாதத்தில் அதிகரிக்கும். வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் தங்கள் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவது மும்மரம் தேவை. உழைப்பாளர்கள் கடன் வாங்கி செலவு செய்வதை முடிந்த வரை தவிர்க்கவும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: பிப். 17.
அதிர்ஷ்ட நாள்: பிப். 21. மார்ச் 3, 12.
பரிகாரம்: குரு பகவானை வழிபட நன்மை நடக்கும்.
உத்திரட்டாதி : அறிவாற்றலைக் கொண்டு எதையும் சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் சூரியனும் அங்கே சஞ்சரிப்பதால் இதுவரை நீங்கள் அடைந்து வந்த முன்னேற்றத்தில் சிறு பின்னடைவு ஏற்படும். பல வகையிலும் செலவு அதிகரிக்கும். உடல் நிலையில் ஏதேனும் ஒரு பிரச்னை உருவாகி உங்களை சங்கடப்படுத்தும். பணி புரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சங்கடம் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். குடும்பத்தில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டிருக்கும். ஜென்ம ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்களுக்கு வரவை கொடுத்துக் கொண்டே இருப்பார். குரு பகவானின் பார்வை சங்கடத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். முன்னேற்றமான பலன்களை உண்டாக்கும். இதுநாள்வரை இருந்த பிரச்னை, போராட்டங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த வேண்டுதல்கள் நிறைவேறும். மனக் குழப்பம் விலகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகள் அரசு வழி விவகாரங்களிலும் கணக்கு வழக்குகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 18.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 21, 26. மார்ச் 3, 8, 12.
பரிகாரம் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
ரேவதி : தெளிவான சிந்தனையும் புத்திசாதுரியமும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதம்.
புதன் பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், மாதம் முழுவதும் சனியும் சூரியனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழியிலும் செலவு அதிகரிக்கும். உடல் நிலையில் ஏதேனும் சங்கடம் ஏற்படும். அதற்காக மருத்துவச்செலவு ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்திற்காகவும் செலவு அதிகரிக்கும். இந்த நேரத்தில் வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். பிறர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டும், பண ஆசையாலும் கையில் இருக்கும் பணத்தை கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். குரு பகவானால் திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலர் புதிய வீடு கட்டி பால் காய்ச்சுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நெருக்கடி இருந்தாலும் பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தினர் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் இந்த நேரத்தில் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் ஒரு முறைக்கு பலமுறை யோசிக்கவும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவும், சுக்கிரனும் உங்கள் ஆசைகளை அதிகரிக்கலாம். செல்வம் செல்வாக்கு என வேகமாக செயல்படுவீர். அதற்காக செலவு அதிகரிக்கும். ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது எல்லா விதத்திலும் நன்மை பயக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் அதிகாரியின் வழிகாட்டுதல்படி செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும்.
சந்திராஷ்டமம்: பிப். 19.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 21, 23. மார்ச் 3, 5, 12, 14.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.