பதிவு செய்த நாள்
13
மார்
2025
04:03
மேஷம்; அசுவினி: நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பங்குனி மாதம் நன்மையான மாதம். பொருளாதார நிலை உயரும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நடத்தி முடிக்ககூடிய அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். காவல், பேரிடர் மீட்புத்துறையில் பணிபுரிவோரின் செல்வாக்கு உயரும். நட்சத்திர நாதன் கேது, மாதம் முழுவதும் ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல், மனநிலை சீராகும். வரவு அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் செலவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பாராத மாற்றம் ஏற்படும். அரசுவழி முயற்சி தள்ளிப்போகும். ஒருசிலர் தொழில் காரணமாக வெளியூருக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். சுக்கிர பகவானின் வக்கிரத்தினால் குடும்பத்தில் சல சலப்பு தோன்றும். அவசரத் தேவைகளுக்காக நகைகளை விற்று அடகு வைத்தும் நிலைமையை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். மார்ச் 30 முதல் புதன் சாதகமாக இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 19, 20.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 18, 25, 27. ஏப். 7, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபட நினைப்பது நடந்தேறும்.
பரணி; பங்குனி மாதம் கவனமுடன் செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் ஏப். 7 வரை சாதகமாக சஞ்சரிக்கும் நிலையில் இதுவரை தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும் மாதம். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் வக்கிரமாக சஞ்சரிப்பதுடன், சூரியனும் ராகுவும் அங்கே இணைந்திருப்பதால் ஒரு பக்கம் யோகம் என்றால் மறுபக்கம் நெருக்கடி என்ற நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் இடைவெளி உண்டாகும். அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். ஆசையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தை விற்க வேண்டிய நிலை ஏற்படும். வண்டி வாகனம் வகையில் செலவு அதிகரிக்கும் ஆறாம் இட கேதுவும், லாப ஸ்தான சனியும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். நினைத்த வேலைகளை நடத்திக்கொள்ள முடியும். முடங்கிக் கிடந்த தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். வழக்குகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி வரும். நேற்றைய கனவு நனவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 20, 21.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.
கார்த்திகை 1 ம் பாதம்; பிறக்கும் பங்குனி மாதம் நிதானமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த சுபிட்ச நிலையில் மாறும். பண விவகாரத்தில் சங்கடம் உண்டாகும். விரயச்செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புஇழுபறியாகும். அரசுவழி முயற்சி தள்ளிப் போகும். வழக்குகளை சந்தித்தாலும் குரு பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். அனைத்திலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் மருந்து மாத்திரைகளால் குணமாகும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்து வருவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சஞ்சரித்தினால் எத்தனைப் பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்க கூடிய சக்தி உண்டாகும். உங்களுக்கு சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நினைத்ததை உங்களால் நடத்திக்கொள்ள முடியும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. பொன் பொருட்களில் எச்சரிக்கை அவசியம். வெளியூர் செல்லும்போது வீட்டிற்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் செல்ல வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 21.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 19, 27, 28. ஏப். 1, 9, 10.
பரிகாரம்: சொக்கநாதரை வழிபட சங்கடம் நீங்கும்.