பதிவு செய்த நாள்
10
டிச
2012
10:12
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவிலின் பழமையான மரத்தேர் கரையானுக்கு இரையாகியுள்ளதால், நான்காண்டுகளாக தேரோட்ட விழா தடைப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையையேற்று, 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அடுத்த சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். மதுரை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கோவிலுக்கு அதிகளவில் வருவதால், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோவில் நடை, நாள் முழுவதும் திறந்தே இருக்கும். ஆடி மாதம், வெள்ளி, செவ்வாய், அமாவாசை நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், கடைசி செவ்வாய் கிழமை, முழுவதும் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய மரத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். பெரும்பாலான கோவில்களில், தங்க, வெள்ளி ரதம் என உருவாக்கப்பட்டாலும், இந்த கோவிலில் மட்டும் 200 ஆண்டுகள் பழமையான மரத்தேர் வடம் பிடித்து இழுப்பது சிறப்பு.
தேர் சக்கரம் உட்பட அனைத்து பகுதிகளும் மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழமையான இத்தேரிலுள்ள மரங்கள் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டம் கண்டு வருவதால், அதிகாரிகள் அவ்வப்போது பராமரிப்பு வேலை செய்து தேரோட்டம் நடத்தி வந்தனர். ஆனால், தேர் முழுவதும் கரையானுக்கு இரையாகியதால், கடந்த மூன்றாண்டுகளாக திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் தேரை சீரமைத்து, தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அம்மன் அமரவைக்கும் பீடம் உள்ளிட்ட அனைத்தும் கரையானால் அரிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், நான்காம் ஆண்டாக தேரோட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், "தேரை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, சட்டசபையில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துகருப்பண்ணசாமி வலியுறுத்தினார். அரசும் இதையேற்று, தேரை புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 28 லட்சத்தில் மரத்தேர் முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளது. கடந்த வாரம் கோவில் வந்த எம்.எல்.ஏ., தேரை ஆய்வு செய்து, "விரைவில் தேர் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "புதிய தேரும், இதே போன்று சிற்ப வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்படவுள்ளது. தேர் பணிகளை விரைவில் நிறைவு செய்து, நான்காண்டுகளாக தடைப்பட்டுள்ள தேரோட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.