பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
04:04
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் போலீசார் முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். உத்தரகோசமங்கையில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு போலீசார் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்களை அனுமதித்ததால் அனைத்து ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்கு வரத்து நெரிசலால் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
லட்சம் பக்தர்கள் கோயிலை சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர். வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்களும் வெளியேற முடியாமல் உத்தரகோசமங்கை பகுதியில் நெருக்கடியில் தவித்தனர். வெப்பம் அதிகளவு இருந்ததால் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்பட்டனர். உத்தரகோசமங்கைக்கு ராமநாதபுரத்தில் இருந்து புத்தேந்தல், எக்ககுடி வழியாக ஒரு பாதையும், உத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணிக்கு செல்லும் சாலையும், உத்தரகோசமங்கையில் இருந்து சிக்கல், முதுகுளத்துார் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதில் ஒருவழிப்பாதையாக பக்தர்களை அனுமதித்திருந்தால் எளிதாக வாகனங்கள் சென்றிருக்க முடியும். பஸ்களை கோயில் வரை அனுமதிக்காமல் தற்காலிக பஸ் ஸ்டாண்டுகளை கோயிலுக்கு வெளியில் அமைத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு பயணிகள், பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருக்க முடியும். காலை 9:00 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மதியம் 2:00 மணி வரை நீடித்தது. பக்தர்கள் 5:00 மணி நேரமாக கடுமையான கோடை வெயில் கொளுத்திய போதும் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். போக்குவரத்து நெரிசல் குறித்து போக்குவரத்து போலீசாரோ, அரசு போக்குவரத்துக்கழகத்தினரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.