சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2025 12:04
மயிலாடுதுறை: சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சோழ நாட்டின் சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. சீதளா பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உட்பிரகாரத்தை சுற்றி வந்து திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வதம் பிடித்து இழுத்து அம்பாளை தரிசனம் செய்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. பெண்கள் மாவிளக்கு தீபமிட்டும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்