பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
மேஷம்: அசுவினி.. எந்தநிலை வந்தாலும் அதற்காக சோர்ந்து போகாமல் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். கேது ஏப்.26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். மாதக் கடைசியில் மங்களகாரகன் குருபகவானும் 3ல் சஞ்சரிக்கப் போகிறார். இந்நிலைகளால் இதுவரையில் நீங்கள் அடைந்த பலன்களில் மாற்றம் இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் முன்பு கிடைத்ததுபோல் லாபம் கிடைக்காமல் போகும். உறவுகளுடன் இடைவெளி அதிகரிக்கும். பிள்ளைகளை நினைத்து மனம் வருத்தம் அடையும். பூர்வீக சொத்தில் பிரச்சனை ஏற்படலாம். ஆனாலும் லாப ஸ்தான சனி பகவானும், ஏப். 26 முதல் ராகுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். பண வரவை அதிகரிப்பர். வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். ஓய்வின்றி உழைப்பீர்கள். ஏப்.17 முதல் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால் மனதில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் லாபம் என்ற நிலை ஏற்படும். அரசியல் வாதிகள், பணியாளர்கள் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களின் கனவு நனவாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும்.
சந்திராஷ்டமம்: ஏப்.15,16,மே13
அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,18,25,27,மே 7, 9
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
பரணி; நினைத்ததை நடத்தும் திறமை படைத்த உங்களுக்கு சித்திரை நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஏப். 17 ம் தேதி வக்ர நிவர்த்தி அடைவதால், மனதில் இருந்த சங்கடம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். 11ல் சஞ்சரிக்கும் சனியும், ஏப். 26 முதல் அங்கு சஞ்சரிக்கப் போகும் ராகுவும் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை தருவர். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். உங்கள் நோக்கம் வெற்றியடையும். சிறிய முதலீட்டிலும் நிறைய லாபம் காண்பீர்கள். பிறரின் தவறுகளை கண்டறிந்து தட்டிக் கேட்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீடு, மனை, வாகனம் என்ற கனவு நனவாகும். என்றாலும் ஜென்ம ராசிக்குள் சூரியனும், 4ல் செவ்வாயும், 8 ம் இடத்தை சனியும் பார்ப்பதால் அலைச்சல், உழைப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்பு தோன்றும். ஏப். 26 முதல் 5ல் சஞ்சரிக்கும் கேதுவால் உறவினர் வழியில் சங்கடம் உண்டாகும். சிலருக்கு காதல் ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகும். பிள்ளைகள் பற்றிய பயம் உண்டாகும். மாணவர்கள் உயர் கல்விக்காக விடாமுயற்சி தேவை. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சி லாபம் தரும். வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப்.16,17, மே14.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 18, 24, 27, மே 6, 9.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை ஏற்படும்.
கார்த்திகை 1 ம் பாதம்; எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்திலும், சூரியன் ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம், உடல் நிலையில் சங்கடங்கள் என்று உங்களைப் பயமுறுத்தும். எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் சங்கடப்படுவீர்கள். மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். குடும்பத்திலும் ஏதாகிலும் ஒரு பிரச்சனை தலை எடுக்கும். நிம்மதி என்பது கேள்விக்குறியாக இருக்கும். பிள்ளைகளுக்காக முயற்சிகள் அதிகரிக்கும். மனம் அலைபாயத் தொடங்கும் என்றாலும், லாப ஸ்தானம் சனியாலும், ஏப். 26 முதல் ராகுவாலும் பலம் பெறுவதால் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய அளவிற்கு வருமானம் வரும். முடங்கிக்கிடந்த தொழில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக எதிர்பார்த்த பணம் வரும். ஏப். 17 முதல் சுக்கிரன் உச்சமடைவதால் கணவன் மனைவிக்குள் இருந்த சங்கடங்கள் விலகும். இருவரும் ஒற்றுமையாக செயல்பட்டு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இல்லாமல் செய்வீர்கள். வீடு, மனை, வாகனம் என்று வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் கனவுகள் நனவாகும். உயர் கல்விக்காக மாணவர்கள் நிறைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: ஏப். 18.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 19, 27, 28. மே 1, 9, 10
பரிகாரம் நடராஜரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.