கர்நாடகா ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். இங்கு ஏராளமான பழங்கால, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் உள்ளன. ஆண்டுகள் பல ஆனாலும் கோவில்களின் கட்டடம் இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு கடவுளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கடலோர மாவட்டமான உடுப்பியில் 700 ஆண்டுகள் பழமையான பிரமாண்ட கோவில் அமைந்துள்ளது.
உடுப்பி டவுனில் உள்ளது அனந்தேஸ்வரர் கோவில். விஷ்ணுவின் அவதாரமான பரசுராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. லிங்க வடிவில் பரசுராமரை வழிபடும் தனித்துவமான கோவிலாகவும் விளங்குகிறது.
கோவில் அமைந்திருக்கும் பகுதி பரசுராமரால் கடலில் இருந்து வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. ராமபோஜன் என்ற மன்னர் இங்கு லிங்க வடிவில் பரசுராமரை வழிபட்டதாகவும் வரலாறு குறைகிறது.
சமஸ்கிருத நுால்களின்படி கோவில் அமைந்திருக்கும் இடம் ‘ராஜதபிதா’ என்றும் அழைக்கப்படுகிறது. 700 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் மத்வாச்சாரியார் எழுதிய மருத்துவ சம்பிரதாயபடி பூஜைகள், சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வாச்சாரியார் பல தத்துவவாத எழுத்துகளை எழுதி தனது சீடர்களுக்கு இங்கு வைத்து தான் கற்பித்ததாகவும் வரலாறு சொல்கிறது.
துளு பிராந்தியத்தில் மிகவும் பழமையானதாக இந்த கோவில் பார்க்கப்படுகிறது. புட்டிகே மடத்தால் இந்த கோவில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
கோவிலின் கட்டமைப்பு கேரள பாணியில் இருப்பதால், இங்கு வரும் பக்தர்களுக்கு நாம் கேரள கோவிலுக்கு வந்துவிட்டோமா என்று எண்ணம் ஏற்படும்.
கோவிலின் நடை தினமும் அதிகாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து உடுப்பி 400 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பஸ், ரயில் சேவை உள்ளது. விமானத்தில் செல்வோர் மங்களூரில் இறங்கி அங்கிருந்து உடுப்பி சென்றடையலாம்.