பதிவு செய்த நாள்
24
ஏப்
2025
05:04
கோவை; புளியம்பட்டி, தென் சீரடி சக்தி சாய்ராம் கோவிலில் சாய்பாபாவின் புனித பாதுகை தரிசன விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். புளியம்பட்டியில், பவானிசாகர் சாலையில், தென் சீரடி சக்தி சாய்ராம் தர்ம ஸ்தல கோவில் உள்ளது. இக்கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கட்ட பயன்படுத்தப்பட்ட மார்பிள் கற்களை கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சீரடி சாய்பாபா கோவிலில் இருந்து, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு மாநிலங்களுக்கு வழிபாட்டுக்காக, பாதுகை கொண்டு செல்லப்படுகிறது. புளியம்பட்டி வந்த பாதுகைக்கு, டானாபுதூர் முத்துமாரியம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அலங்கார குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பாதுகைகள் ஊர்வலமாக, தென் சீரடி சாய்பாபா கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இரண்டு நாட்களாக, காலை முதல் இரவு வரை சிறப்பு ஆரத்தி வழிபாடு நடந்தது. பரதநாட்டியம் மற்றும் இறை நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பாதுகையை தரிசித்து, தொட்டு வணங்கினர். சக்தி சாய் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் கூறுகையில், ‘‘இக்கோவிலில் ஐந்து கால பூஜை நடக்கிறது. குறிப்பாக வியாழனன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருப்பணிக்கு பக்தர்கள் உதவலாம்,’’ என்றார்.