பதிவு செய்த நாள்
20
மே
2025
12:05
பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டி, பரபரப்பான வர்த்தக மையமாகும். இப்பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதே பகுதியில் புராதனமான நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியின், பேகூர் கிராமத்தின் ஓசூர் சாலையில், நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது 9வது, 10வது நுாற்றாண்டில், கங்கர்கள், சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புராதான கோவிலாகும். முதலாவது குலோத்துங்க சோழன் இக்கோவிலை விரிவுபடுத்தியதாக, இங்குள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இது பல சிறப்புகளை அடக்கியுள்ளது. கோவில் வளாகத்தில் நாகேஸ்வரா, சோளேஸ்வரா, மருளேஸ்வரா, கமடேஸ்வரா, கர்ணேஸ்வரா என்கின்ற ஐந்து சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. நாகேஸ்வரா மற்றும் சோளேஸ்வரா கோவில்கள் இரட்டை கோவில்களை போன்று தோற்றமளிக்கின்றன. அனைத்து கோவில்களின் கர்ப்ப கிரகத்திலும் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இதே காரணத்தால் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் கங்கர் வம்சத்தினர் இரண்டு கோவில்களை கட்டினர். அதன்பின் ஆட்சிக்கு வந்த சோழர்கள் மற்ற மூன்று கோவில்களையும் கட்டினராம். இந்த கோவில் பெங்களூரின் மிகவும் புராதானமான கோவில்களில் ஒன்றாகும். நகரின் பரபரப்பில் இருந்து சிறிது தள்ளி உள்ளது. அமைதியான இடத்தில் அமைந்துள்ளது.
இங்கு வந்து பஞ்சலிங்கங்களை தரிசித்தால், பாவங்கள் விலகும். வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக சர்ப்ப தோஷத்தை நீக்கும் சக்தி கொண்டது. சர்ப்ப தோஷத்தால் அவதிப்படுவோர், இக்கோவிலுக்கு வந்து பூஜித்து நிவர்த்தி செய்து கொள்கின்றனர். பெங்களூரின் சுற்றுப்பகுதி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, திங்கட் கிழமைகளில் இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்.
ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரம்ம ரதோத்சவம் நடக்கும். பக்தர்கள் கோவிலில் தங்கி, இரவு முழுதும் சிவனை தரிசிப்பர். இவருக்கு நடக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களை காண்பர். நாகேஸ்வரர் கோவில் வளாகத்தில், சிறிய கோபாலசுவாமி கோவில், காசி விஸ்வநாதர் சன்னிதிகளையும் காணலாம்.
நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், எலக்ட்ரானிக் சிட்டிக்கு பி.எம்.டி.சி., பஸ் வசதி உள்ளது. ஆட்டோ, வாடகை கார்களும் இயக்கப்படுகின்றன. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 47.5 கி.மீ., தொலைவில், பேகூர் உள்ளது. வெளியூர்களில் இருந்து வருவோர், விமான நிலையத்தில் இறங்கி வாடகை காரில் கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 6:30 மணி முதல், 11:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை. தொலைபேசி எண்: 99647 50123