பதிவு செய்த நாள்
20
மே
2025
12:05
ராபர்ட்சன்பேட்டை இரண்டாவது கிராஸில் கிங் ஜார்ஜ் அரங்கம் அருகே, கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. தர்மத்தை காக்கும் தேவதையாக, கருணை பொழியும் அம்பாளாக அருள்பாலிக்கிறார். ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவிலும், உரிகம் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்திலும் உள்ளது. ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில், 1990ல் கோவில் கட்டும் திருப்பணியை துவக்கினர். பக்தர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழக கலாசாரபடி, தங்கவயலில் முதல் ராஜகோபுரம் உள்ள கோவிலாக உருவாக்கப்பட்டது. 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்ரஹங்கள்
கோவிலில் கணபதி, நகரதீஸ்வரர், மூலஸ்தானத்தில் கன்னிகா பரமேஸ்வரி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், லட்சுமி சத்ய நாராயணா, ஹனுமந்தர், நவக்கிரஹங்கள் சிலைகள் உள்ளன. தினமும் அனைத்து விக்ரஹங்களுக்கும் காலை 11:00 மணிக்குள் அபிஷேகம் நடக்கிறது. மகா மங்களாரத்தியும் நடக்கிறது. கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி, நகரதீஸ்வரருக்கு பிரதோஷம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு வேல் பூஜை, கிருத்திகை, லட்சுமி சத்ய நாராயணாவுக்கு பவுர்ணமி, அமாவாசையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் வாசவி ஜெயந்தி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் சிறப்பு அம்சமாக தேர் பவனியும் உண்டு. நவராத்திரியின் போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
வர்த்தகம் செழிப்பு
பெரும்பாலான வியாபாரிகள், தினமும் அம்பாளை தரிசித்த பின்னரே, தங்களின் வியாபாரத்தை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் மூலம் வர்த்தகம் செழித்தோங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. சட்ட சிக்கலில் உள்ளவர்களுக்கு அம்பாள் நியாயத்தை வழங்குவதாக பலரது எண்ணம். திருமணம் ஆகாத பெண்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள், எலுமிச்சை விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால், நிச்சயம் திருமணம் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இங்கு நடக்கும் சுமங்கலி பூஜை விசேஷம், பெண் பக்தர்கள் பஜனை நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழா கோலாகலமாக நடக்கிறது.
தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் பூஜைகள் நடக்கும்.