இந்தியாவில் எலிகளை வழிபடுவதற்கு உலக புகழ் பெற்ற கர்ணி மாதா கோவில் உள்ளது. இதுபோல நாய்களை கடவுளாக நினைத்து வழிபடுவதற்காக கர்நாடகாவிலும் ஒரு கோவில் கட்டப்பட்டு உள்ளது.
பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகா அக்ரஹாரா வலகெரேஹள்ளி கிராமத்தில் உள்ளது கெம்பம்மா தேவி கோவில். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள இரண்டு நாய் சிலைகளை வழிபடுகின்றனர். இந்த கோவில் நாய்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு கிராமவாசியான ரமேஷ் என்பவர் கனவில் தோன்றிய கெம்பம்மா தேவி, இந்த ஊரில் இருந்த இரண்டு நாய்கள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளது. இதனால் எனது கோவிலில், இரண்டு நாய் சிலைகள் கட்டி பக்தர்கள் வழிபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரமேஷ், கிராம மக்கள் உதவியுடன், கோவிலில் இரண்டு நாய் சிலைகளை அமைத்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நாய் சிலைகளை தரிசனம் செய்த பின், கெம்பம்மா தேவியை தரிசிக்கின்றனர்.
நாய் சிலையை தரிசனம் செய்வதன் மூலம், தங்களை சுற்றியுள்ள தீமைகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த கோவில் நாய் வழிபாட்டிற்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாகவும், மனிதர்களுக்கும்- நாய்களுக்கும் இடையில் வலுவான பிணைப்பிற்கு ஒரு சான்றாகவும் உள்ளது.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து 80 கி.மீ., துாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து சென்னப்பட்டணாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்வோர் சென்னப்பட்டணாவில் இறங்கி அங்கிருந்து 16 கி.மீ., துாரம் பயணம் செய்து கோவிலுக்கு செல்லலாம்.