பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
02:07
பெங்களூரு ரூரல் மாவட்டம், தாபஸ்பேட் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது ஸ்ரீ கங்காதரேஸ்வரா சுவாமி மற்றும் ஹொன்னாதேவி கோவில். இந்த கோவில் சிவகங்கை மலையின் மீது அமைந்து உள்ளது. பொதுவாக மலை மீது பெருமாள் கோவில்களே இருக்கும் நிலையில், இங்கு சிவனின் அவதாரமான கங்காதரேஸ்வரர் வீற்றிருக்கிறார். படிப்பதற்கும், கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அதிசயங்கள் நிறைந்த கோவிலாக உள்ளது. இக்கோவிலை பற்றி விரிவாக அறியலாமா?
கோவில், கடல் மட்டத்திலிருந்து 2,640 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையின் குன்று தாமரை இலையின் மீது இருப்பது போன்று காட்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி நான்கு திசைகளில் இருந்தும் மலையை காணலாம். ஒவ்வொரு திசையில் இருந்து பார்க்கும் போது, எருது, நாகம், லிங்கம், விநாயகர் போன்ற வடிவங்களில் மலை காட்சி அளிக்கிறது.
ஸ்ரீ கங்காதரேஸ்வரரின் சிலை, கங்கை புனித நீரில் இருந்து உருவானதாக நம்பப்படுகிறது. இதனால், இந்த கோவிலை, ‘தெற்கு காசி’ என அழைக்கின்றனர். காசிக்கு போக முடியாத பலரும் வந்து தரிசனம் செய்கின்றனர். காசியை விட சக்தி வாய்ந்த கோவில் எனவும் நம்பப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்தவரை தரிசிக்க, மலையை கடந்து தான் ஆக வேண்டும். சற்று சிரமமாக இருந்தாலும், மனதிற்குள் ‘நமசிவாயா’ எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை சொல்லிக்கொண்டு மலையேறும் போது, களைப்பு துளியும் தெரியாது. மலையேறுவதற்கு படிக்கட்டுகள் உள்ளன.
மலையின் மீது ஹொன்னாதேவியின் கோவிலும் உள்ளது. பெரிய நந்தி சிலையும் உள்ளது. இதன் அழகை பார்க்க ஒரு நாள் போதாது. இந்த கோவில் ஹொய்சாளா ஆட்சியாளர்கள் மற்றும் கெம்பேகவுடாவின் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.
தெற்கு காசி என்பதற்கு ஏற்றாற் போல, மலையின் மீது தீர்த்தங்களும் உள்ளன. இங்கு ஒற்றை கல்லால் உருவாகிய வாக்கு விநாயகர் விக்ரஹகம் உள்ளது. இந்த விநாயகரிடம் வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும். இதனால் இவரை வாக்கு கணபதி என அழைக்கின்றனர்.
இங்குள்ள பாதாள கங்கை குளத்தில், பாறைகளின் உள்ளிருந்து நீர் வருகிறது. ஹொன்னா தேவி, அரக்கனை வதம் செய்த பின், கோபத்தில் தாகத்தை தணிக்க, பாறையை பிளந்ததாகவும், இதனால் பாறையில் இருந்து தண்ணீர் வெளிப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. யுகாதி முடிந்த 15 நாட்கள் கழித்து தேவியின் ரத உற்சவம் நடக்கும். அப்போது, ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய், வெண்ணெயாக மாறும். வேறு எங்கும் இத்தகைய அதிசயம் இல்லை. இந்த வெண்ணெயை சாப்பிட்டால் லட்சியங்கள் நிறைவேறும், அறிவு கிடைக்கும் என நம்புகின்றனர். சங்கராந்தி விழாவின் போது, ஸ்ரீ கங்காதரேஸ்வரருக்கும் ஸ்ரீ ஹொன்னாதேவிக்கும் திருமண விழா நடத்தப்படுகிறது, இந்த விழாவில் பாறையிலிருந்து வரும் ஊற்று நீர் பயன்படுத்தப்படுகிறது.