பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
03:07
புனர்பூசம் 4 ம் பாதம்; மனசாட்சியின்படி செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் குரு சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வரும் பாதிப்பு உங்களை நெருங்காது. உடல் நிலையில் உண்டான நெருக்கடி விலகும். எதிரிகளால் தோன்றிய அவமானம் விலகும். செல்வாக்கு உயரும். செய்துவரும் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்களிடம் வந்து சரணடையும் நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும் என்றாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியனால் படபடப்பு, அவசரம், வேகம் என்ற நிலையெல்லாம் இருக்கும். அதன் காரணமாக செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனதிலும் குழப்பம் உண்டாகும் என்பதால் இக்காலத்தில் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். பின்விளைவு பற்றி யோசித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். சொத்து விற்பது, வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் தோன்றுவதற்கு வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 9, 10.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 21, 29, 30. ஆக. 2, 3, 11, 12.
பரிகாரம்: தில்லை காளியை வழிபட சங்கடம் நீங்கும்.
பூசம்: நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் அவரால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காது. அதே நேரத்தில் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் அங்கே சஞ்சரிக்கும் ராகுவாலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. உடல்பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். உங்கள் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்படுவீர்கள். ஜூலை 30 முதல் ரத்தக்காரகன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு உயரும் என்றாலும், குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பணவரவில் தடை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்களை உண்டாக்கலாம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. ஜென்ம சூரியன் உங்கள் வேலைகளை வேகப்படுத்துவார் என்றாலும் வேலைக்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வேலையிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், வழக்குகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் நினைத்தது நடந்தேறும். அதிர்ஷ்டக் காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உழைப்பாளர்கள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஆக. 10, 11.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 20, 26, 29. ஆக. 2, 8.
பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும்.
ஆயில்யம் : நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு ஆடி மாதம், முயற்சியால் வெற்றி பெறக் கூடிய மாதம். ஜூலை 24 வரை புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் கவனம் தேவை. பத்திரம், பாண்டு போன்றவற்றில் கையெழுத்திடும் முன் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. ஜூலை 25 முதல் விரய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சிலர் கடன்காரர்களை சமாளிப்பதற்காக நகைகளை அடகு வைக்கும் நிலை உண்டாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை சுக ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கவுரவம், செல்வாக்கு, அந்தஸ்திற்கு பாதகம் ஏற்படாது. சிலர் புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். அஷ்டம ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். ஜூலை 30 முதல் தைரியக்காரகன் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண முடியும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதும். வரவு செலவில் கவனமாக இருப்பதும் நன்மையாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும்.
சந்திராஷ்டமம்: ஆக.11, 12.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 23, 29. ஆக. 2, 5, 14.
பரிகாரம்: அழகரை வழிபட நினைத்தது பலிக்கும்.