பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
03:07
அவிட்டம் 3, 4 ம் பாதம்: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். மாதம் முழுவதும் ராசிநாதன் வக்கிரம் அடைந்திருந்தாலும் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை அகற்றுவார். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் கை மேலோங்கும். ஜென்ம ராசிக்கு குருபார்வை உண்டாவதால் எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பொன், பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ரத்த உறவுகளுடன் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பூமிக்காரகன் செவ்வாயின் சஞ்சாரநிலை எதிர்மறையாக இருப்பதால் விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் தங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் ஒவ்வொன்றையும் உங்கள் நேரடி கண்காணிப்பில் செய்யும் போது எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 9
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் விலகும்.
சதயம்: எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் யோகக் காரகன் ராகு சஞ்சரித்தாலும் 5ம் இட குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் நிலையில் இருந்த பாதிப்பு, போராட்டம், பிரச்னைகள் யாவும் விலகும். மனஅழுத்தம் நீங்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜூலை 26 முதல் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். ஆக. 3 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த நெருக்கடி விலகும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் ஜூலை 30 வரை செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நன்மையை ஏற்படுத்தும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 29, 30.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 22, 26, 31. ஆக. 4, 8, 13.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: தெளிந்த ஞானமும் திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். மங்களகாரகன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை இருந்த நெருக்கடி, போராட்டம் யாவும் விலகும். பணியில் ஏற்பட்ட வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவும், தெய்வ அருளும் கிடைத்து எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். சாதாரணமாக தொடங்கிய தொழிலும் இக்காலத்தில் அதிக வருமானத்தை தரும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இழுபறியாக இந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வங்கியில் கேட்டிருந்த கடனுதவி கிடைக்கும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பொருளாதார நிலை உயரும் என்றாலும் ஜூலை 30 முதல் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: ஜூலை 30, 31.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 21, 26. ஆக. 3, 8, 12.
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட மனக்கவலை விலகும்.